சிங்கப்பூரில் தமிழ் வளர்க்கும் “உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம்” – ஒவ்வொரு தமிழர்களுக்குமான பெருமை!

சிங்கப்பூரில் செயிண்ட் ஜார்ஜஸ் தமிழ்மொழி நிலையம் 1978-ஆம் ஆண்டு முதற்கொண்டு இயங்கத் தொடங்கியது. 1982-ஆம் ஆண்டு, இந்நிலையம் முன்னைய பீட்டி உயர்நிலைப்பள்ளி வளாகத்திற்கு இடம்பெயர்ந்தது. 1983-ஆம் ஆண்டு, இந்நிலையம் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் எனப் பெயர் மாற்றங்கண்டது.

2001-ஆம் ஆண்டில், இந்நிலையம் தமிழ்மொழி பயிற்றும் பொறுப்போடு, தேசிய வளமை நிலையமாகவும் இயங்கி வருகின்றது. சிங்கப்பூர் கல்வியமைச்சின் கண்காணிப்பில் இயங்கும் இந்நிலையம் மாணவர்களுக்கு மொழியை மட்டுமல்லாது கலை, பண்பாட்டு விழுமியங்களையும் கொண்டு சேர்க்கும் பொறுப்பைத் தலைமேற்கொண்டுள்ளது.

தமிழ் மாணவர்களுக்குத் தரமான தமிழ்க்கல்வியை வழங்குவதை, முதன்மை நோக்கமாகக்கொண்டுள்ளது. தமிழ்மொழி வழங்கப்படாத பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு இம்மொழிநிலையம் சிறந்த தமிழ் கற்றல் அனுபவத்தை உருவாக்கிக்கொடுத்துப் பல ஆண்டுகள் நற்சேவை புரிந்துவருகிறது. இந்நிலையத்தில் மாணவர்களுக்கு இலக்கியப் பாடமும் கற்பிக்கப்படுகிறது.

இந்நிலையத்தின் மற்றொரு சிறப்பு இங்கு வழங்கப்படுகின்ற இணைப்பாட வகுப்புகளாகும். தமிழ்ப் பண்பாட்டின் வெளிப்பாடாக விளங்கும் கவின்கலைகள் இந்நிலையத்தில் மாணவர்களுக்கு நன்முறையில் கற்றுத்தரப்படுகின்றன. மேலும், இந்திய நிகழ்த்துகலைகளைக் கற்பிக்கும் நிலையமாகவும் இது தனித்தன்மையோடு விளங்குகிறது. இந்நிலையத்தில் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமல்லாது ஏனைய பள்ளிகளில் பயிலும் தமிழ் மாணவர்களுக்கும் பயன்படும் ஓர் உன்னத நிலையமென உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் விளங்குகிறது.

இந்நிலையத்தில் ஆண்டுதோறும் வளமூட்டும் நடவடிக்கைகள், முகாம்கள், விழாக்கள் போன்றவை திட்டமிட்டு நடத்தப்படுகின்றன. தமிழ் மாணவர்களின் மொழி ஈடுபாட்டை வளர்க்கும் நோக்கில் இவை புத்தாக்கத்துடனும் புதுமை நோக்குடனும் நடத்தப்படுகின்றன. மாணவர்கள் மின்னிலக்கத் தலைமுறையினராக மாறிவிட்ட இன்றைய சூழலில், அவர்களைத் தமிழ்மொழியின்பால் ஈர்ப்பதற்கு மொழிநிலையத்தார் தொழில்நுட்பத்தின் துணைகொண்டு கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

அவற்றிற்குத் தேவையான கணினிக்கூடம், மடிக்கணினி, ஐபேட் முதலான வளங்களைப் பயன்படுத்தி மொழியைப் புத்தாக்கத்துடன் மாணவர்களிடம் கொண்டுசேர்க்க நிலைய ஆசிரியர்கள் பெருமுயற்சி மேற்கொள்கின்றனர்.

வகுப்பறைக்கு அப்பாலும் கற்றல் நடைபெற வேண்டும் என்பதில் இந்நிலையம் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. இதன் அடிப்படையில், இந்நிலையத்தில் உள்ளூர்வெளிநாட்டுக் கற்றல் பயணங்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இவை மாணவர்களுக்குச் சிறந்த கற்றல் அனுபவங்களாக அமைகின்றன.

மேலும் மாணவர்களைச் சமூகத்துடன் ஒன்றிணைத்துச் சமூக ஆர்வலர்களாக உருவாக்கும் நோக்கில் பல்வேறு சமூக அமைப்புகளுடன் கைகோத்து மொழிவளர்ச்சிக்கும், தமிழ்மொழிப் பயன்பாட்டிற்குமான வாய்ப்பினையும் இந்நிலையத்தார் மாணவர்களுக்கு உருவாக்கி தருகிறார்கள்.

Centre Address

2 Beatty Road, Singapore 209954
Telephone (65) 6298 0781
Fax (65) 6298 4677