‘குடும்பத்துடன் சிங்கப்பூர் வந்தடைந்த கோத்தபய ராஜபக்சே’- விளக்கம் அளித்துள்ள சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம்!

Photo: Gotabaya Rajapaksa official Twitter Page

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, எரிபொருள், அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு அதிகரித்தது. இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள், கடந்த வாரம் இலங்கை அதிபர் மாளிகையை சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர். அத்துடன், இலங்கை  அதிபர் கோத்தபய ராஜபக்சே உடனடியாக தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

‘விறுவிறுன்னு ஏறி இறங்கலாம்’ – ஒரு வழியாக சீரமைப்புப் பணி நிறைவடைந்தது

பொதுமக்களின் போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து, கோத்தபய ராஜபக்சே தனது குடும்பத்துடன் மாலத்தீவில் தஞ்சமடைந்தார். இந்த செய்தியறிந்த, மாலத்தீவு மக்கள் தலைநகர் மாலேவில் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியத்தோடு, உடனடியாக இங்கிருந்து அவர் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் கோத்தபய ராஜபக்சே மாலத்தீவில் தொடர்ந்து தங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து, சவூதி ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான B787-9 என்ற விமானம் மூலம் மாலத்தீவில் இருந்து நேற்று (14/07/2022) மாலை சிங்கப்பூருக்கு வந்தடைந்தார். அந்த விமானம் சாங்கி சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 3- ல் தரையிறங்கியது. அதைத் தொடர்ந்து, சாலை மார்க்கமாக தங்கும் நட்சத்திர ஹோட்டலுக்கு அவர் தனது குடும்பத்துடன் கார் மூலம் சென்றடைந்தார்.

மூப்படையும் தொழிலாளர்களுக்கு அவசியமான வழிகாட்டி இதுதான் – சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் வெளியிட்ட புத்தகம்

இந்த நிலையில், இலங்கை அதிபர் பதவியை கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை அவர் இலங்கை நாடாளுமன்ற சபாநாயகருக்கு அனுப்பி வைத்தார்.

கோத்தபய ராஜபக்சேவின் வருகை குறித்து விளக்கம் அளித்துள்ள சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம், “தனிப்பட்ட பயணம் ஒன்றின் மூலம் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் அடைக்கலம் கேட்கவில்லை; அவருக்கு எந்த அடைக்கலமும் வழங்கவில்லை. சிங்கப்பூர் பொதுவாக புகலிடக் கோரிக்கைகளை ஏற்பதில்லை” எனத் தெரிவித்துள்ளது.