‘தாய்லாந்து, கம்போடியாவில் இருந்து சிங்கப்பூருக்கு ‘VTL’ விமான சேவை’- ஜெட்ஸ்டார் ஏசியா அறிவிப்பு!

Photo: Jetstar Asia

கொரோனா தடுப்பூசியை முழுமையாகச் செலுத்திக் கொண்டவர்களுக்கான சிறப்பு பயணப் பாதைத் திட்டத்தின் கீழ் (Vaccinated Travel Lane- ‘VTL’) இந்தியா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, பிரிட்டன், அமெரிக்கா, கனடா, தென் கொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு இரு மார்க்கத்திலும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தின் கீழ் சிங்கப்பூர் வரும் பயணிகள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள தேவையில்லை. இருப்பினும், தற்போது ‘ஓமிக்ரான்’ வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, ‘VTL’-ன் கீழ் சிங்கப்பூருக்கு வரும் பயணிகள் அனைவரும் தொடர்ந்து ஏழு நாட்களுக்கு நாள்தோறும் ஆன்டிஜென் ரேபிட் டெஸ்ட் (ART) என்ற கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

சிங்கப்பூரில் மேலும் 715 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று!

இந்த நிலையில், தாய்லாந்து, கம்போடியா ஆகிய நாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு ‘VTL’ விமான சேவையை வழங்கவிருப்பதாக, குறைந்த கட்டணத்தில் விமான சேவையை வழங்கி வரும் ஜெட்ஸ்டார் ஏசியா (Jetstar Asia) நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், இதற்கான அனுமதியை சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் (Bangkok) இருந்து சிங்கப்பூருக்கு வரும் டிசம்பர் 15- ஆம் தேதி முதல் இரு மார்க்கத்திலும் ‘VTL’ விமானங்கள் இயக்கப்படும். வாரத்தில் புதன்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, சனிக்கிழமை, வெள்ளிக்கிழமை, திங்கள்கிழமை ஆகிய ஐந்து நாட்களுக்கு விமானங்கள் இயக்கப்படும். 3K514, 3K516 என்ற எண்களில் விமானங்கள் இயக்கப்படும்.

போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் 50- வது ஆண்டு நிறைவு- சிறப்பு அஞ்சல் தலைகள் வெளியீடு!

அதேபோல், கம்போடியா நாட்டின் தலைநகர் புனோம் பென்னில் (Phnom Penh) இருந்து சிங்கப்பூருக்கு வரும் டிசம்பர் 16- ஆம் தேதி முதல் இரு மார்க்கத்திலும் ‘VTL’ விமானங்கள் இயக்கப்படும். வாரத்தில் வியாழன்கிழமை, புதன்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, திங்கள்கிழமை ஆகிய நாட்களுக்கு விமானங்கள் இயக்கப்படும். 3K592, 3K594 என்ற எண்களில் விமானங்கள் இயக்கப்படும்.

இதற்கான பயண டிக்கெட் முன்பதிவு, பயண அட்டவணை தொடர்பான மேலும் விவரங்களுக்கு ஜெட்ஸ்டார் ஏசியாவின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.