சிங்கப்பூரில் வசிக்க வீடில்லாமல் தவிக்கும் ஊழியர்கள் – அதிர்ச்சி ஆய்வு..!

சிங்கப்பூரில் வீடற்றவர்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட முதல் ஆய்வின்படி, சுமார் 1,000 பேர் சிங்கப்பூரின் தெருக்களில் வாழ்வதாக குறிப்பிடுகிறது.

லீ குவான் யூ ஸ்கூல் ஆஃப் பப்ளிக் பாலிசியின் உதவி பேராசிரியர் என்.ஜி.கோக் ஹோ தலைமையிலான இந்த ஆய்வின்படி; பெடோக், கல்லாங் மற்றும் நகரத்தில் ஒவ்வொரு பகுதியிலும் 50க்கும் மேற்பட்ட மக்கள் வீதிகளில் வீடற்ற நிலையில் உள்ளனர்.

மேலும், புக்கிட் பஞ்சாங், செம்பவாங் மற்றும் செங்காங்கில் 10க்கும் குறைவான வீடற்றவர்கள் காணப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வீடற்றவர்களில் 87 சதவீதம் பேர் ஆண்கள் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பகுதியினர் பிரிக்கப்பட்டவர்கள், விவாகரத்து செய்யப்பட்டவர்கள் அல்லது விதவைகள், ஒற்றை நபர்கள் ஆகும்.

ஆய்வில் வீடில்லாத 88 பேரிடம் நேர்காணலும் நடத்தப்பட்டது. வீடில்லாத 10 பேரில் 6 பேர் வேலை செய்பவர்கள் என்றும், இவர்களின் இடைநிலை வருமானம் $1,400 என்றும் தெரியவந்துள்ளது. ஆனால் தேசிய அளவிலான இடைநிலை வருமானம் $3,467 என்றும் ஆய்வுகள் கூறுகிறது.

வீடில்லாதவர்களில் பாதிப் பேர் தங்களுக்கு வேலை இல்லாதது, நிரந்தர வேலை இல்லாதது, அல்லது மிகவும் குறைந்த வருமானம் ஈட்டுவதைக் காரணங்களாகக் கூறினர்.

மேலும், அவர்களின் குடும்ப பிரச்சனைகளையும் மற்றொரு முக்கிய காரணமாக கூறினர்.

தேவாலயங்கள் மற்றும் கோயில்களும் வீடற்றவர்களுக்காக தஞ்சம் அடைய உதவி செய்கின்றன. மேலும், சிங்கப்பூரில் தன்னார்வ குழு ஒன்று வீடற்றவர்களுடன் நட்பு வைத்து அவர்களுக்கு உதவி செய்து வருகிறது.