போலி கல்வி தகுதி சான்றிதழ் சமர்ப்பித்த 11 வெளிநாட்டினருக்கு சிங்கப்பூரில் பணியாற்ற நிரந்தர தடை!

Photo: Singapore Parliament

 

கடந்த 2018- ஆம் ஆண்டு முதல் 2020- ஆம் ஆண்டு வரை, 11 வேலை பாஸ் (Employment Pass) மற்றும் எஸ் பாஸ் (S Pass) வைத்திருப்பவர்கள் இன்ஃபோகாம் தொழில்நுட்ப நிறுவனத்தில் (Infocomm Technology- ‘ICT’) பணியாற்றி வருகின்றனர். போலி கல்வி தகுதி சான்றிதழ்களைச் சமர்ப்பித்ததற்காக அவர்களின் வேலை பாஸ் ரத்து செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் சிங்கப்பூரில் பணியாற்றுவதற்கு நிரந்தரமாக தடை விதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (02/08/2021) நடைபெற்ற அவை அலுவலின் போது மனிதவள அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த மனிதவள அமைச்சர் டான் சீ லெங் (Manpower Minister Dr Tan See Leng), “இந்த வெளிநாட்டு ஊழியர்களுக்கான விண்ணப்பங்களை மதிப்பீடு செய்யும் போது நிறுவனங்களின் தரவுத் தளத்தின் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட தகுதிகளை தனது அமைச்சகம் சரிபார்க்கிறது. வேலை பாஸ் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் போது அவர்களின் தகுதிகள் உண்மையானவை என்பதை உறுதி செய்யும் முதன்மை பொறுப்பு முதலாளிகளுக்கு உள்ளது.

புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு கட்டுப்படாதவர்களின் ‘பெர்மிட்’ அல்லது ‘பாஸ்’ ரத்து செய்யப்படலாம்

முறைகேடு நேர அதிக வாய்ப்புள்ள சூழலில், வேலை அனுமதி விண்ணப்ப நடைமுறையை மூன்றாம் தரப்பு அமைப்பு ஒன்றின் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும். அதற்கான ஆதாரத்தை, முதலாளிகள் அமைச்சகத்திடம் ஒப்படைக்க வேண்டும். போலி அல்லது அங்கீகரிக்கப்படாத தகுதிகள் கொண்ட விண்ணப்பங்களை நாங்கள் நிராகரிப்போம்.

விண்ணப்பதாரர்களின் கல்வி தகுதி சான்றிதழ்கள் அவ்வப்போது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களுடன் இணைந்து இவை உண்மையான சான்றிதழ்களா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.” இவ்வாறு அமைச்சர் கூறினார்.

போலி கல்வி தகுதிச் சான்றிதழை சமர்ப்பிக்கும் குற்றத்தைப் புரிவோருக்கு, 20,000 சிங்கப்பூர் டாலர் வரையிலான அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் அல்லது அபராதம் மற்றும் அபராதம் மற்றும் சிறைத் தண்டனை ஆகிய இரண்டும் விதிக்கப்படலாம்.