பண மோசடி: 300 பேரிடம் சிங்கப்பூர் காவல் படை விசாரணை!

singapore-serial-love-scammer-jailed
Photo: Mothership

 

பண மோசடிகளில் ஈடுப்பட்டதாக சந்தேகத்தின் அடிப்படையில் 16 வயது முதல் 74 வயதுக்கு உட்பட ஆண்கள், பெண்கள் என 300 பேரிடம் சிங்கப்பூர் காவல் படை (Singapore Police Force) விசாரணை நடத்தி வருகிறது.

 

இது தொடர்பாக, சிங்கப்பூர் காவல் படை செய்திக் குறிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மே 22- ஆம் தேதி முதல் ஜூன் 4- ஆம் தேதி வரை இரண்டு வாரம் தீவு முழுவதும் அமலாக்கத்துறை நடத்திய அதிரடி நடவடிக்கையில் சந்தேகப்படும் நபர்களில் 193 ஆண்கள், 101 பெண்கள் அடையாளம் காணப்பட்டனர். இந்த நடவடிக்கையில் வணிக விவகாரத்துறை அதிகாரிகள் மற்றும் நிலப் பிரிவுகளைச் சேர்ந்த ஏழு காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.

 

சந்தேகப்படும் நபர்கள் சுமார் 534 மோசடிகளில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது. இதில் முக்கியமாக இ-காமர்ஸ், முதலீடு, வேலை மற்றும் கடன் மோசடிகள், போலி சூதாட்டத் தளங்கள் ஆகியவை அடங்கும். இந்த மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 7 மில்லியன் சிங்கப்பூர் டாலரை இழந்துள்ளனர்.

 

பண மோசடி அல்லது உரிமம் இல்லாமல் பணம் செலுத்தும் சேவைகளை வழங்கியது போன்றச் சந்தேகங்களுக்காக சந்தேக நபர்கள் விசாரிக்கப்படுகிறார்கள். தண்டனை சட்டத்தின் பிரிவு 420-ன் கீழ் மோசடி செய்தக் குற்றத்திற்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

பொதுமக்கள் www.scamalert.sg என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம் (அல்லது) மோசடி எதிர்ப்பு ஹாட்லைன் (Anti- Scam Hotline) 1800-722-6688 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம்.

 

மோசடி குறித்த தகவலை காவல்துறையின் ஹாட்லைனுக்கு (Police Hotline) தெரிவிக்க 1800-255-0000 என்ற எண்ணை அழைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.