சிங்கப்பூர் உதவியுடன் திட்டம் வகுக்கப்பட்ட அமராவதியை தவிர்த்து மேலும் 2 தலைநகரங்கள்…!

Andra Pradesh Amaravati project

தென்னிந்திய ஆந்திர மாநில அரசு, தலைநகர் அமராவதியை ரூ.1 லட்சம் கோடி மதிப்பீட்டில் உலகத்தரம் வாய்ந்த நகராக உருவாக்க முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு திட்டமிட்டார்.

அமராவதி நகரம் உருவாக்க சிங்கப்பூர் நாட்டின் உதவியுடன் திட்டம் வகுக்கப்பட்டது. இதற்கான வேலைகள் நடந்துகொண்டிருந்த சூழலில், சட்டசபை தேர்தல் நடைபெற்றது, அந்த தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி வெற்றி பெற்றார்.

அதனை தொடர்ந்து முன்னாள் ஆட்சியில் பல்வேறு திட்டங்களில் ஊழல் நடப்பதாக கூறி, அதனை மறுஆய்வு செய்யப்போவதாக ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்தார்.

ஆந்திர மாநில அரசு, தலைநகர் அமராவதியைக் கட்ட சிங்கப்பூர் மேம்பாட்டாளர்களுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், கடந்த மாதம் ஜெகன்மோகன், அமராவதியை தவிர்த்து மேலும் 2 தலைநகரங்கள் உருவாக்கப்படும், என அறிவித்தார்.

இதில், அமராவதியை சட்டசபை தலைநகராகவும், விசாகப்பட்டினத்தை செயல்பாட்டு தலைநகராகவும், கர்னூலை நீதிமன்ற தலைநகராகவும் அமைப்பதாக அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்தது.

இதற்கு எதிர்ப்புகள் உருவாகியுள்ள நிலையில், நிலம் வழங்கிய விவசாயிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

ஆந்திரப் பிரதேசத்தின் புதிய நகரமாக அமைய இருந்த அமராவதி மேம்பாட்டுத் திட்டத்திலிருந்து நிதி உதவி தர மறுத்து உலக வங்கி ஒதுங்கியது.

இந்நிலையில், 3 தலைநகரை உருவாக்குவதை சட்டமாக நிறைவேற்ற, சிறப்பு சட்டசபை கூட்டம் ஜனவரி 20 முதல் 3 நாட்கள் நடைபெறுகிறது.

இதற்கு எதிராக போட்டி சட்டசபை நடத்த இந்திய கம்யூ., மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகள் முடிவு செய்துள்ளதால், சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து, நிதியமைச்சர் ராஜேந்திரநாத் ரெட்டி மசோதா தாக்கல் செய்தார். பிறகு அவர் பேசுகையில், ஆந்திராவின் அனைத்து மண்டலங்களும் பரவலான வளர்ச்சி அடைய வேண்டும் என்ற நோக்கில் 3 தலைநகரங்கள் உருவாக்கப்பட உள்ளது, என்றார்.

மேலும், அமராவதி திட்டத்திற்காக 33 ஆயிரம் ஏக்கர் நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு நிவாரணம் குறித்து இந்த கூட்டத்தொடரில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.