கொரோனா சுய பரிசோதனை கருவிகள் இன்று முதல் வீடுகளுக்கு அஞ்சல் மூலம் விநியோகம்!

 

சிங்கப்பூரில் கொரோனா தடுப்பு பணிகளை முடுக்கிவிட்டுள்ள அதே நேரத்தில் கொரோனா பரிசோதனைகளும் நாளுக்கு நாள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒருவருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டாலும், அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், அந்த குடியிருப்பைச் சுற்றியுள்ள அனைத்து கடைகளின் உரிமையாளர்கள், தொழிலாளர்களுக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, அதிகளவில் மருத்துவ குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனால் நோய்த்தொற்று ஒருவரிடமிருந்து மற்றொரு பரவும் சங்கலித் தொடரை உடைக்க முடியும்.

சாங்கி விமான நிலையத்தின் முதலாவது, மூன்றாவது முனையங்கள் செப்.1- ல் மீண்டும் திறப்பு!

மேலும், கொரோனா மருத்துவ பரிசோதனையை அனைவரும் சுயமாக மேற்கொள்ளும் வகையில் பொதுமக்களுக்கு இலவச கொரோனா சுய பரிசோதனை கருவிகளையும் அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில், சிங்கப்பூரில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் ‘Antigen Rapid’ என்ற கொரோனா சுய பரிசோதனைக் கருவிகள் இன்று (28/08/2021) முதல் சிங்கப்பூர் அஞ்சல் துறை (SingPost) மூலம் விநியோகிக்கப்படும். அதன்படி, ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ஆறு கொரோனா சுய பரிசோதனைக் கருவிகள் அஞ்சல் மூலம் விநியோகிக்கப்பட உள்ளது. அடுத்த ஒரு மாதத்துக்கு அவை தீவு எங்கும் விநியோகம் செய்யப்படும். சிங்கப்பூரில் தடுப்பூசிப் போட்டுக்கொண்டவர்களின் விகிதம் அதிகரித்துள்ளதால் முன்னெச்சரிக்கைப் பரிசோதனை, சுய பரிசோதனை ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதேபோல், செப்டம்பர் மாதம் 13- ஆம் தேதியில் இருந்து பாலர் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, SPED பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் கூடுதலாக மூன்று பரிசோதனை கருவிகள் வழங்கப்படும். பெரும்பாலான மாணவர்கள் கொரோனா தடுப்பூசிக்கு இன்னும் தகுதிப் பெறாததால் கூடுதல் கருவிகள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம், மாணவர்கள் எளிமையாக, துரிதமாக கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள முடியும். சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தும் மருத்துவரிடம் பரிசோதனை செய்துகொள்ளாத மாணவர்களுக்கு, இக்கருவிகள் பெரிதும் உதவும்.

சிங்கப்பூர் மக்கள் தொகையில் முழுமையாக கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொண்டவர்கள் 79% பேர்!

ஏற்கனவே, தெமாசெக் அறக்கட்டளை நிறுவனம் (Temasek Foundation) சார்பில் ஒவ்வொரு வீட்டிற்கும் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவைக் கண்டறியும் ஆக்சிமீட்டர் கருவியை இலவசமாக வழங்கியது. அதைத் தொடர்ந்து, தற்போது ஒவ்வொரு குடும்பத்திற்கும் இரண்டு வகையான முகக்கவசங்களை இலவசமாக அந்த அறக்கட்டளை நிறுவனம் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.