இந்த பிளாக்கில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு மீண்டும் கட்டாய கொரோனா பரிசோதனை!

Photo: Google Maps

 

சிங்கப்பூரில் கொரோனா பரிசோதனை முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், “ஆங் மோ கியோ அவென்யூ 10 பிளாக் 556-ல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் (Residents of Block 556 Ang Mo Kio Avenue 10) வசிக்கும் அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் இன்று (08/08/2021) மீண்டும் கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. ஆங் மோ கியோ தெரு 54- ல் உள்ள முன்னாள் ‘Da Qiao’ தொடக்கப் பள்ளியில் (Former Premises of Da Qiao Primary School in Ang Mo Kio Street 54) உள்ள வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பரிசோதனை மையத்தில் (Regional Screening Centre) இன்று (08/08/2021) காலை 09.00 AM மணி முதல் மாலை 04.00 PM மணி வரை கொரோனா பரிசோதனைகள் நடைபெறுகிறது.

13 மாதங்களுக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பச்சிளங் குழந்தை!

கட்டாய கொரோனா பரிசோதனைகள் தொடர்பாகக் குடியிருப்பாளர்களுக்குத் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதோடு, குறுஞ்செய்தியும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 5- ஆம் தேதி முதல் தங்களுக்கு நோய்த்தொற்று இல்லை என்று பரிசோதனைகள் மூலம் தெரிய வந்தவர்கள் இன்றைய பரிசோதனையில் கலந்து கொள்வது கட்டாயம் இல்லை. சமூகத்தில் நோய் பரவாமல் தடுக்கும் வகையில் இங்கு மீண்டும் கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.” இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதே அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த ஆகஸ்ட் 1- ஆம் தேதி அன்று மொத்தம் 532 பேருக்கு கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 11- க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மீண்டும் கட்டாய கொரோனா பரிசோதனை நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.