“சசிகுமார் நடிப்பில் வெளியாகியுள்ள ‘அயோத்தி’ திரைப்படத்தின் கதை என்னுடையது”- சிங்கப்பூர் சரவணன்’ நாவலாசிரியர் மில்லத் அகமது குற்றச்சாட்டு!

File Photo

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், எனது ‘சிங்கப்பூரில் சரவணன்’ என்ற நாவலின் மையக் கருத்தை அப்பட்டமாக திருடி இருப்பதாக காரைக்கால் எழுத்தாளர் மில்லத் அகமது மார்ச் 17- ஆம் தேதி அன்று சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தனது ஆதாரங்களை காட்டி நிரூபித்துள்ளார்.

ரெட்ஹில் குளோஸ் அடுக்குமாடி குடியிருப்பில் ஆண் நபர் மர்ம மரணம்!

‘சிங்கப்பூரில் சரவணன்’ என்ற நாவல் 2016- ல் சிங்கப்பூர் எழுத்தாளர் கழகம் நடத்திய குறுநாவல் போட்டியில் வெற்றி பெற்ற கதை. அதை மணிமேகலைப் பிரசுரம் 2020- ல் சென்னை புத்தகக் காட்சியில் நூலாக வெளியிட்டது. மேலும் இந்நூல் அமெரிக்கத் தமிழ் பல்கலைக்கழக விருது, திருப்பூர் தமிழ் சங்க விருது, புதுச்சேரி படைப்பாளர் இயக்க விருது, தக்கலை இந்தியப் பாரம்பரிய கலை இலக்கியப் பேரவை விருது மற்றும் மகாகவி பாரதி கலை இலக்கிய விருது என பல விருதுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நாவலின் மையக்கருத்து வெளிநாட்டில் இறந்த ஒருவரின் உடலை விமானம் மூலம் ஏழு சான்றிதழ்களுடன் இந்தியாவிற்கு கொண்டு போவது. அதே போல அயோத்தி திரைப்படத்திலும், இறந்த ஒருவரின் உடலை மதுரையிலிருந்து விமானம் மூலம் ஏழு சான்றிதழ்களுடன் அயோத்திக்கு கொண்டு போவது.

நாவலில், இறந்த இந்து நண்பரின் உடலைக் கொண்டு செல்ல சிலுவை என்ற கிறிஸ்தவரும், சலீம் என்ற இஸ்லாமியரும் உதவுவார்கள். இந்த திரைப்படத்தில் இறந்த இந்து பெண்மணியின் உடலை கொண்டு செல்ல அப்துல் மாலிக் என்ற இஸ்லாமியர் உதவுவார்.

நாவலில் மத நல்லிணக்கத்தை முதன்மையாகக் கொண்டு எழுத்தாளர் மில்லத் அகமது எழுதியிருந்தார். அதே போல திரைப்படத்திலும் மத நல்லிணக்கம் சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கான ஆதாரங்களை அவர் பத்திரிக்கையாளர்களிடம் காண்பித்தார்.

திண்டுக்கல்லில் இருந்து சிங்கப்பூருக்கு செல்லும் சின்ன வெங்காயம்!

எனது கதைக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே நான், இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தினேன் என்றும், இதனை ஊடகம்தான் ‘அயோத்தி’ திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற பெரிய எழுத்தாளர்கள் எங்களைப் போன்ற சிறிய எழுத்தாளர்களின் கதைகளை களவாடுவது சரியில்லை என்றும், கற்பனையை சிந்தித்து உருவாக்குவது கடினம், அதனை வேறுவிதமாக உருமாற்றுவது எளிது என்பதையும் கூறி, இனிவரும் காலங்களில் எந்த எழுத்தாளர்களுக்கும் இதுபோல நடக்கக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டு, வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூறினார்.

21 திரைப்படங்களில் நடித்த சசிக்குமாரின் திரை வாழ்க்கையில் 10 ஆண்டுகள் கழித்து அண்மையில் வெளியான அயோத்தி திரைப்படம் விமர்சனம் ரீதியாக ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.