மார்சிலிங் கிரசண்ட் அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து!

Photo: SCDF Official Facebook Page

சிங்கப்பூரில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் ப்ளாக் 218 மார்சிலிங் கிரசண்ட் (Marsiling Crescent) அடுக்குமாடி குடியிருப்பில் ஜூன் 22- ஆம் தேதி அன்று இரவு 10.40 PM மணிக்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டதாக சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படையினரின் (Singapore Civil Defence Force- ‘SCDF’) தீயணைப்புத்துறைக்கு தொலைபேசி மூலம் தகவல் கிடைத்துள்ளது.

காமன்வெல்த் அரசாங்கத் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக ருவாண்டாவுக்கு சென்றுள்ள சிங்கப்பூர் பிரதமர்!

இதையடுத்து, சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படையினர் மற்றும் உட்லண்ட்ஸ் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் (Woodlands Fire Station) தீயணைப்பு வாகனங்கள் மற்றும் கருவிகளுடன் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்துச் சென்றனர். அப்போது, அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் உள்ள ஒரு வீட்டில் தீ கொளுந்துவிட்டு எரிந்துக் கொண்டிருப்பதைக் கண்டனர். மேலும் வெப்பம் மற்றும் கரும்புகை வெளியேறிக் கொண்டிருந்தது.

அதைத் தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள் சுவாச கருவி செட்டை அணிந்துக் கொண்டு, தீ விபத்து ஏற்பட்ட வீட்டிற்குள் நுழைந்தனர். பின்னர், தண்ணீரைப் பீய்ச்சியடித்து, தீயை முழுவதும் அணைத்தனர். எனினும், அந்த அறையில் இருந்த பொருட்கள் முழுவதும் எரிந்து தீக்கரையானது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலை என்ன? – சிங்கப்பூரில் இப்படியெல்லாமா நடக்குது!!

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தீ விபத்து ஏற்பட்ட குடியிருப்பு அருகில் வசிக்கும் மற்ற 60 குடியிருப்பாளர்களை காவல்துறையினர் பத்திரமாக வெளியேற்றினர்.

இதனிடையே, சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படையினர் வருவதற்கு முன்னதாக, வீட்டின் அறையில் இருந்த இரண்டு குழந்தைகளை இரண்டு காவலர்கள் பத்திரமாக மீட்டனர். பின்னர், அந்த இரண்டு குழந்தைகளும் சிங்கப்பூர் சிவில் பாதுகாப்புப் படையினருக்கு சொந்தமான இரண்டு ஆம்புலன்ஸ்கள் மூலம் கேகே பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்கு (KK Women’s and Children’s Hospital) அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

ஜூன் 26- ஆம் தேதி அன்று ஸ்ரீ சிவன் கோயிலில் பிரதோஷ பூஜை!

முன்னதாக, தீ விபத்து ஏற்பட்ட வீட்டில் சிக்கி இருந்த இரண்டு குழந்தைகளை மீட்பதற்காக பொதுமக்களின் ஒருவர் வீட்டின் கதவை உடைக்க முயற்சி செய்ததாக தகவல் கூறுகின்றனர். அவருக்கு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படை தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.