முதியவரை காப்பாற்ற போராடிய சிறுவன்… விருது வழங்கி கௌரவித்த சிங்கப்பூர்

(Photo: Saint Andrews Alumni Association fb page)

ஸ்ரீராம் சுப்ரமணியம் என்ற 11 வயது சிறுவன், முதியவர் ஒருவர் தரையில் மயங்கி கிடந்தது கண்டு, அருகில் உள்ள பல்பொருள் அங்காடி மற்றும் காவல் நிலையங்களுக்கு ஓடினான். இறுதியில், அந்த சிறுவனின் முயற்சியால் முதியவர் உயிர் காப்பாற்றப்பட்டது.

ஸ்ரீராம் சுப்ரமணியனின் மனிதநேயம் மிக்க செயலை பாராட்டும் வகையில் சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படை (SCDF) அச்சிறுவனுக்கு சமூக உயிர் காப்பாளர் விருதை வழங்கியது.

பார்வைத்திறன் குறைபாடுடைய முதியவருக்கு உதவிய தமிழக ஊழியர் – குவியும் பாராட்டு

செயின்ட் ஆண்ட்ரூஸ் தொடக்கப் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வரும் ஸ்ரீராம் கடந்த மார்ச் 23, மாலை 4.45 மணி அளவில் அவனது பயிற்சி வகுப்பிற்கு செல்லும் போது பொத்தோங் பாசிர் சமூக மன்றம் அருகில் அமைந்துள்ள பேருந்து நிறுத்தத்தில் வலியில் துடித்து கொண்டு இருந்த முதியவரை கண்டான், அவன் சோதித்து பார்க்கும் போது அவர் சுயநினைவு அற்று இருந்தார்.

அருகில் இருந்தவர்கள் யாரும் உதவ முன்வராத காரணத்தால் அக்கம் பக்கம் உள்ள பல்பொருள் அங்காடி மற்றும் காவல் நிலையத்திற்கு சென்று உதவி கோரினான். இதற்கிடையில், அவன் உதவி கோரிய இருவர் உதவி கரம் நீட்டினர்.

இதய இயக்க மீட்பு சிகிச்சையான சிபிஆர் (கார்டியோபுல்மோனரி ரெசுசியாட்டின்) அந்த முதியவருக்கு மேற்கொள்ளப்பட்டு, அவரை SCDFயின் மருத்துவ வாகனம் வந்து ஏற்றி செல்லும் வரை உடன் இருந்து உதவினர். முதியவர் பாதுகாப்பாக இருப்பதை அறிந்த பின்னரே அச்சிறுவன் தன் பயிற்சி வகுப்பிற்கு திரும்பினான்.

SCDF-ன் சமூக ஈடுபாட்டின் தலைவரான திரு சங் லிப் எர்ன், ஸ்ரீராமின் துணிச்சலையும் விடாமுயற்சியையும் பாராட்டியதோடு, அவன் நம் சமூகம் பெருமைப்பட வேண்டிய இளம் வீரன் என புகழாரம் சூட்டி விருதை வழங்கினார்.

விருது கிடைத்ததற்கு மகிழ்ச்சி அடைவதாகவும், இரக்க குணத்துடன் மற்றவர்களுக்கு என்னால் முடிந்த வரை உதவி செய்வேன், என தன் கருத்தை ஸ்ரீராம் பதிவு செய்தான்.

காவல்துறை வேன், லாரி மோதி விபத்து – 5 காவல்துறை அதிகாரிகள் மற்றும் 11 லாரி பயணிகளுக்கு காயம்