மலேசிய ஓட்டுநர்களின் உணவிற்காக S$2400 செலவிட்டிருக்கும் சிங்கப்பூர் டிரைவர்

சிங்கப்பூரை சேர்ந்தவர் சுப்பிரமணியம்(60). 1995ல் தொடங்கி தற்போது வரை பஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார். சுப்ரமணியத்தின் வீட்டில் அவரது மனைவி வர்சாகி மற்றும் அவரது மகள் வித்யா மட்டுமே. சுப்பிரமணியம் வீட்டு சாப்பாட்டை மட்டுமே சாப்பிடுவாராம். அதனால் மனைவி, மகளின் உதவியுடன் அவரே சமைத்து தினமும் வேலைக்கு செல்லும் போது கொண்டு செல்வாராம். தன் மனைவி செய்யும் சிக்கன் பிரியாணி என்றால் சுப்ரமணியத்திற்கு உயிர்.

மலேசியாவை சேந்தவர் சுகுமாரன்(35). இவரும் பஸ் டிரைவர் தான். சுப்ரமணியத்தின் வேலை பார்ப்பவர். சுப்பிரமணியம் தன் வீட்டிலிருந்து உணவு கொண்டுவரும்போது இன்னொரு கேரியரிலும் கொண்டுவருவாராம். அதை சகஊழியர்களுடன் பகிர்ந்து உண்பாராம்.

மலேசியாவில் ஊரடங்கு

சுகுமாரன் தன் குடும்பத்தை விட்டு சிங்கப்பூரில் இருக்கிறார். அவருடன் பிறந்தவர்கள் 6 பேர். அவர்களுடன் சுகுமாரனின் பெற்றோரும் மலேசியாவில் உள்ளனர்.

கொரோனா வைரஸ் காரணமாக, திடீரென மலேசியாவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மார்ச் 18 முதல் 31 வரை அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு பின்னர் ஏப்ரல் 28 வரை நீட்டிக்கப்பட்டது. இதனால் சுகுமாரன் மற்றும் சகஊழியர்கள் 16 முதல் 20 பேர் சிங்கப்பூரில் சிக்கிக்கொண்டனர்.

சுகுமாரனால் தன் தாய்நாட்டிற்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் தினமும் தன பெற்றோருக்கு போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்து வருகிறார்.

சகஊழியர்களுக்காக S$2400 செலவு

சகஊழியர்கள் இங்கு சிக்கியுள்ளதால் உணவு ஏற்பாடு செய்ய முடிவு செய்தார் சுப்பிரமணியம். ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் உணவு கிடைப்பது சிரமமாக உள்ளதை அறிந்து 16-20 பேருக்கும் தினசரி நானே உணவு வழங்குகிறேன் என்று பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

அவர்களுக்கு பிடித்தவாறு உணவுகளை சமைத்துக்கொண்டு பரிமாறுகிறார் சுப்பிரமணியம். இதனால் ஒரு நாளைக்கு S$80 என்று இதுவரை S$2400 செலவு செய்துள்ளார். சுப்பிரமணியம் வீடு மீன் குழம்பு தன் அம்மா வைப்பது போன்ற சுவை உள்ளது என்று சுகுமாரன் புகழாரம் சூட்டுகிறார்.

இதுகுறித்து சுப்பிரமணியம்,”பசியுள்ளவர்களுக்கு சேவை செய்ய நான் விரும்புகிறேன். இதன் மூலம் எனக்கு நிறைய செலவுகள் வந்துள்ளது. இருந்தாலும், இவர்களுக்கு உணவு வழங்குவது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது” என்று கூறுகிறார்.

இதுபோல் சொந்த ஊரைவிட்டு வெகுதூரம் வந்து நம்முடன் இருக்கும் சகஊழியர்களுக்கும், நண்பர்களுக்கும் உதவி செய்து மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும்.