தொங்கும் மேடையில் சிக்கிக் கொண்ட தொழிலாளர்களைப் பத்திரமாக மீட்ட ‘SCDF’ வீரர்கள்!

Photo: Singapore Civil Defence Force Official Facebook Page

சிங்கப்பூரில் உள்ள 168 ராபின்சன் சாலையில் (Robinson Road) உள்ள கேப்பிட்டல் டவர் நிறுவனத்திற்கு (Capital Tower) சொந்தமான அலுவலகத்தில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மொத்தம் 52 மாடிகளைக் கொண்ட இந்த அலுவலகத்தில் ஊழியர்கள் பிரிந்து சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டனர். இந்த நிலையில், மார்ச் 20- ஆம் தேதி அன்று மதியம் 01.40 மணியளவில் கட்டடத்தின் 40ஆவது மாடியின் தொங்கும் மேடையில் இரண்டு ஊழியர்கள் சிக்கிக் கொண்டனர்.

சிங்கப்பூரர் குடும்பங்கள் மறுசுழற்சிப் பெட்டிகளைப் பெறுவது எப்படி?- விரிவான தகவல்!

இது குறித்து, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர், பேரிடர் மீட்பு படையினர், காவல்துறையினருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மெரினா பே தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் (Marina Bay Fire Station) மற்றும் பேரிடர் மீட்பு படையின் வீரர்கள் கட்டடத்தின் 41ஆவது மாடிக்கு சென்று, சிக்கியுள்ள ஊழியர்களின் நிலைமை குறித்துக் கண்டறிந்தனர்.

அதைத் தொடர்ந்து, பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த வீரர் ஒருவர், தொங்கும் மேடையில் இறங்கி, ஊழியர் ஒருவரை மட்டும் கயிறு மூலம் பத்திரமாக மீட்டு, 41ஆவது மாடிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மற்றொரு ஊழியருக்கு ஏற்பட்ட பயம் காரணமாக, அவர் ஸ்ட்ரெட்சர் மூலம் படுக்க வைத்து 41ஆவது மாடிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் சிங்கப்பூருக்கு எத்தனையாவது இடம்?

பின்னர் இரண்டு ஊழியர்களும் சிகிச்சைக்காக சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு (Singapore General Hospital) ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ஊழியர்களைப் பாதுகாப்பாக மீட்ட SCDF வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்பு படையினருக்கு பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.