பிளாக் 695 ஜூரோங் வெஸ்ட் குடியிருப்பாளர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை!

Photo: Google Maps

 

சிங்கப்பூரில் கொரோனா தடுப்பு பணிகளிலும், கொரோனா தடுப்பூசி போடும் பணிகளிலும் இடைவிடாமல் சுகாதாரத்துறை தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், கொரோனா பரிசோதனைகளும் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதன் பயனாக, தற்போது கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகிறது.

இந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று (16/08/2021) வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், “ஜூரோங் வெஸ்ட் சென்ட்ரல் 1- ல் உள்ள பிளாக் 695- ல் வசிக்கும் ((Block 695 Jurong West Central 1) ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 14 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த பிளாக்கில் வசிக்கும் அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவிருக்கிறது. அதன்படி, பிளாக் 695-ல் உள்ள வெற்றிட தளத்தில் இன்று (17/08/2021) காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை கொரோனா பரிசோதனை நடைபெறுகிறது.

பன்முக திறமைகளைக் கொண்ட கலைஞர் ஆனந்த கண்ணன் காலமானார்!

ஆகஸ்ட் 13- ஆம் தேதியில் இருந்து கொரோனா நோய்த்தொற்று இல்லை என்று பரிசோதனையில் தெரியவந்தவர்களுக்கு, இந்த பரிசோதனையில் பங்கேற்பது கட்டாயமில்லை. பரிசோதனை தொடர்பாக, குடியிருப்பாளர்களுக்கு துண்டு பிரசுரங்கள் மூலமும், அவர்களின் தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலமும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. மக்கள் உடல்நிலை சரியில்லை என்றால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவரை அணுக வேண்டும். மேலும், இந்த பிளாக்கில் கொரோனா பரவல் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.” இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.