பன்முக திறமைகளைக் கொண்ட கலைஞர் ஆனந்த கண்ணன் காலமானார்!

Photo: Wikipedia

 

சிங்கப்பூரின் பிரபல நடிகரும், நிகழ்ச்சிப் படைப்பாளருமான ஆனந்த கண்ணன் நேற்று (16/08/2021) இரவு காலமானார். அவருக்கு வயது 48. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆனந்த கண்ணன், கடந்த சில தினங்களாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், அவரது உயிர் பிரிந்தது. அவரின் மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றன.

பன்முகத் திறமைக் கொண்ட குறித்து ஆனந்த கண்ணன் பார்ப்போம்!

மரபுக்கலைகளை வளர்க்கும் கலைஞராகக் குறிப்பாக, சிங்கப்பூரில் வில்லுப்பாட்டு, பொய்க்கால் குதிரை, மயிலாட்டம் போன்ற பாரம்பரிய கிராமிய கலைகளை வளர்ப்பதில் அதிகம் கவனம் செலுத்தி வந்தார் ஆனந்த கண்ணன். கூத்துப்பட்டறை ந.முத்துசாமியின் மாணவரான இவர், தேசிய கலைகள் மன்றத்தின் ஆதரவில் இந்தியாவுக்கு சென்று மரபுக்கலைப் பயின்றார். பல மேடை நாடகங்களையும், எழுதியும் இயக்கியும் உள்ளார்.

சிங்கப்பூரில் கடன் வாங்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஏ.கே.தியேட்டர் என்ற நாடகக் குழுவை நிறுவிய ஆனந்த கண்ணன், நாடக கலையையும், தமிழ் மொழியையும் மாணவர்களிடம் எளிமையான முறையில் கொண்டு சேர்க்க பல முயற்சிகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டார்.

தமிழகத்தில் வானொலியில் படைப்பாளராகப் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்ற இவர், பின்னர் ‘சன் மியூசிக்’ எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் படைப்பாளராகி உலக தமிழ் மக்களிடையே பிரபலமானார். அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் சன் டிவியில் சிந்துபாத் என்ற குழந்தைகளை கவரும் தொடரில் நடித்தார். அதன் மூலம், இத்தனை நாளாய் எங்கிருந்தாய், அதிசய உலகம் 3டி போன்ற சில திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் சிங்கப்பூர், மலேசியா, இந்தியா ஆகிய நாடுகளில் உள்ள ரசிகர்களை ஈர்த்தவர் ஆனந்த கண்ணன். மாலை மதுரம், காண்போம் கற்போம், அமளி துமளி, சூப்பர் ஸ்டார் சேலஞ், சவால் சிங்கப்பூர் போன்ற பல உள்ளூர் நிகழ்ச்சிகளைப் படைத்து, அதில் தானே நடித்துள்ளார். அவருக்கு கடந்த 2018- ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடந்த விழாவில், தொகுத்து வழங்கிய ஊர்க்குருவி நிகழ்ச்சிக்காக சிறந்த படைப்பாளர் விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.