கொரோனா விதிமீறல்- இந்திய நாட்டைச் சேர்ந்தவருக்கு ஒன்பது மாத சிறைத்தண்டனை!

(Photo: TODAY)

 

இந்திய நாட்டைச் சேர்ந்தவர் பாலச்சந்திரன் பார்த்திபன். இவருக்கு வயது 26. இவர் வேலை பாஸில் (Employment Pass) சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஆண்டு மே 23- ஆம் தேதி அன்று காலை, பாலச்சந்திரன் பார்த்திபன் தனது தங்கும் விடுதியில் (காய்ச்சல் மற்றும் தொண்டை புண்) உடல்நிலை சரியில்லை என்று கூறினார். மேலும், தான் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளோமா என சந்தேகப்பட்டார்.

 

அதைத் தொடர்ந்து, பாலச்சந்திரன் பார்த்திபன் ஆம்புலன்ஸ் மூலம் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு (Singapore General Hospital- ‘SGH’) கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனையின் வேறொரு பகுதிக்கு மாற்றப்பட்டார். பரிசோதனை முடிவுகள் வரும் வரை வெளியேற வேண்டாம் என்று அவரை செவிலியர்கள் அறிவுறுத்தினர். இருப்பினும் அவர் யாருக்கும் தெரியாமல் மருத்துவமனையில் இருந்து வெளியேறினார்.

 

பின்னர், பாலச்சந்திரன் பார்த்திபன் தியோங் பாரு வரை நடந்து பொதுப் பேருந்தில் ஏறினார். அதைத் தொடர்ந்து இரண்டு பேருந்து நிறுத்தங்களுக்குப் பிறகு இறங்கிய அவர், டாக்சியில் சாங்கி விமான நிலையம் சென்றார். அங்குதான் இந்தியா திரும்ப விமான டிக்கெட் வாங்க முயன்றிருக்கிறார். ஆனால் டிக்கெட் கிடைக்கவில்லை. நான்கு மணிநேரம் விமான நிலையத்தில் சுற்றித் திரிந்த அவரை காவல்துறையினர் பிடித்தனர். மறுநாள் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்சி ஒட்டிய ஓட்டுநருக்கு 14 நாட்கள் வீட்டு தனிமையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

 

கடந்த ஆண்டு ஜூன் 8- ஆம் தேதி அன்று பாலச்சந்திரன் பார்த்திபன் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தங்கும் விடுதிக்கு சென்ற அவரை 14 நாட்கள் வீட்டு தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. எக்காரணத்தைக் கொண்டும் வெளியேற வர வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

 

கடந்த ஆண்டு ஜூன் 16- ஆம் தேதி அன்று அதிகாலை 05.50 மணியளவில் பாலச்சந்திரன் பார்த்திபன் இந்தியா திரும்பும் எண்ணத்தில் தங்கும் விடுதியை விட்டு பெட்டிகளுடன் டாக்சி மூலம் மீண்டும் சாங்கி விமான நிலையத்திற்கு சென்றார். ஆனால் அவரால் இந்திய விமான டிக்கெட்டைப் பெற முடியவில்லை. அன்றிரவு விமான நிலையத்தில் தூங்கிய அவர், மறுநாள் காலையில் தனது உறவினரின் தெம்பனீசில் (Tampines) உள்ள வீட்டிற்குச் சென்றார். என்ன நடந்தது என்பதை அவர் தனது உறவினரிடம் கூறினார். அதையடுத்து, அவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதைத் தொடர்ந்து, அந்த வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் அவரை அழைத்து சென்றனர். அவர் மீது தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

 

இந்த வழக்கு நேற்று (12/07/2021) நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, பாலச்சந்திரன் பார்த்திபன் அரசின் கொரோனா விதிகளை மீறியதை ஒப்புக்கொண்டார். அதைத் தொடர்ந்து, அவருக்கு ஒன்பது மாதச் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.