“கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொள்வது முக்கியம்”- சுகாதாரத்துறை அமைச்சர் ஓங் யீ காங்!

Photo: Ministry Of Health/Facebook Page

 

சிங்கப்பூரில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை தடுப்பூசி நிலையங்களுக்கு சென்று ஆர்வமுடன் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொண்டு வருகின்றன. இருப்பினும், ஒரு சிலர் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதில் தயக்கம் காட்டி வருகின்றன. அவர்களுக்கு சமூக வலைத்தளங்கள் தொலைக்காட்சிகள் போன்றவை மூலம் கொரோனா தடுப்பூசிக் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சுகாதாரத்துறை அமைச்சர் ஓங் யீ காங், “இந்த மாதத்தில் கொரோனா நோய்த்தொற்றால் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். உண்மையில், ஆகஸ்ட் மாதத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த 12 பேரில் 11 பேர் முழுமையாக கொரோனா தடுப்பூசிப் போட்டுக்கொள்ளவில்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமை, தடுப்பூசி போடப்படாத 91 வயது மூதாட்டியும், கொரோனா தடுப்பூசியின் ஒரு டோஸை மட்டும் போட்டுக்கொண்ட 87 வயது முதியவரும் கொரோனாவால் உயிரிழந்தனர். இருவருக்கும் புற்றுநோய், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் அதிக கொழுப்பு போன்ற இணைநோய்கள் இருந்தது.

தடுப்பூசிப் போடாத 86 வயது மூதாட்டி கொரோனாவால் உயிரிழப்பு!

தடுப்பூசிப் போட்டுக்கொள்வது முக்கியம். தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதில் தயக்கம் காட்டும் குடியிருப்பாளர்களை நான் சந்தித்தேன். ஏனெனில், அவர்களுக்கு சில அடிப்படை நோய்கள் உள்ளன, அல்லது அவர்கள் எளிதில் நோய்வாய்ப்படுகிறார்கள். கொரோனா நோய்த்தொற்று அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வது மேலும் முக்கியமான ஒன்றாக அமைகிறது. கொரோனா தடுப்பூசிக் குறித்து ஐயம் உள்ளவர்கள், அவர்களது மருத்துவர்களை நாட வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.

இதனிடையே, கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்கள், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பவர்கள்-ஆகியோரின் விவரங்களை வெளியிடும்போது, சுகாதாரத்துறை அமைச்சகம், அவர்களுக்கு நோய்த்தொற்று உறுதியான தேதியின் அடிப்படையில் பட்டியலிடப்படுகிறது என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.