“அந்த இலக்கை அடைந்து தேசிய தினத்தை மகிழ்ச்சியுடனும், பெருமையுடனும் கொண்டாடலாம்”- சிங்கப்பூர் பிரதமர்!

Photo: Prime Minister Lee Hsien Loong Official Facebook Page

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, கொரோனா தடுப்பூசி முன்களப்பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொள்வதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருவதை நம்மால் காண முடிகிறது. அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் பட்சத்தில் கொரோனா வைரஸின் அடுத்ததடுத்து வரும் அலைகளை நம்மால் எளிதாக எதிர்க்கொள்ள முடியும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றன.

 

இந்த நிலையில், சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வரும் நிலையில், அமல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை சிங்கப்பூர் அரசு படிப்படியாக விலக்கிக் கொண்டு வருகிறது. அதேசமயம், பொதுமக்கள், ஊழியர்கள், மாணவர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மூத்த குடிமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை அரசு முடுக்கிவிட்டுள்ளது.

 

சிங்கப்பூரில் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

இது குறித்து சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “தேசிய தினத்துக்குள் நமது மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு பேருக்கு கொரோனா தடுப்பூசிப் போடப்பட்டு விடும். இதுதான் இன்று பல அமைச்சகப் பணிக்குழு நிர்ணயித்த இலக்கு ஆகும். கொரோனா தடுப்பூசிப் போட்டுக்கொள்வதன் மூலம் பொதுமக்கள் கொரோனா நோயால் பாதிக்கப்படுவதைக் குறைக்க முடியும். கொரோனா வைரஸை முழுமையாக அழிக்க முடியாவிட்டாலும், நீங்கள் நோய்த்தொற்றுக்கு ஆளானால், தடுப்பூசிகள் உங்களை மிகவும் பாதுகாக்கும். மேலும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசிப் போட்டவுடன் கொரோனா கட்டுப்பாடுகளை எளிதாக்கி தளர்வுகள் அளிக்கப்படும்.

 

அதிகமான கொரோனா தடுப்பூசி விநியோகங்களைப் பெற்றுள்ளதால், தடுப்பூசிப் போடும் பணியைக் கணிசமாக விரைவுப்படுத்தியுள்ளோம். தேசிய தினமான வரும் ஆகஸ்ட் மாதம் 9- ஆம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசி திட்டத்தின் இலக்கை அடைவதற்கு அனைவரும் பங்காற்ற வேண்டும். அந்த இலக்கை அடைந்து நம் நாட்டின் தேசிய தினத்தை மகிழ்ச்சியுடனும், பெருமையுடனும் கொண்டாடலாம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

இன்றைய நிலவரப்படி, சிங்கப்பூரில் மொத்தம் 50.3 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர். இதில் 20.6 லட்சம் பேர் இரண்டு கொரோனா தடுப்பூசியும் எடுத்துக்கொண்டனர். சிங்கப்பூரில் மொத்த மக்கள் தொகையில் 36.1% பேர் இரண்டு கொரோனா தடுப்பூசியும் எடுத்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.