“தடுப்பூசிப் போட்டுக்கொள்ளுங்கள்; தாமதிக்க வேண்டாம்”- பிரதமர் லீ சியன் லூங் அறிவுறுத்தல்!

 

சிங்கப்பூரில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தியுள்ளது. மேலும், பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசிப் போடும் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிரதமர் லீ சியன் லூங் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் காணொளி ஒன்றை இன்று (24/07/2021) வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “நீங்கள் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டுவிட்டீர்களா? ஆம் என்றால். அது மிகவும் நல்லது. ஏனெனில் நீங்கள் இப்பொது கோவிட் 19 கிருமித் தொற்றிலிருந்து பாதுகாக்கப்படுகிறீர்கள். நீங்கள் நோய்வாய்ப்பட்டாலும் கூட, உங்களுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படும் சத்தியம் மிகக் குறைவு. நீங்கள் தடுப்பூசியை இன்னும் போட்டுக்கொள்ளவில்லை எனில், அன்புகூர்ந்து கூடிய விரைவில் போட்டுக்கொள்ளுங்கள்.

‘NTU’ விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள சைக்கிள் ஹெல்மெட்!

உங்கள் நண்பர்கள், அண்டை வீட்டார் உள்ளிட்டப் பெரும்பாலானோர், ஏற்கனவே தடுப்பூசியைப் போட்டுக் கொண்டுவிட்டனர். உங்களைப் பாதுகாத்திடுங்கள்; உங்கள் குடும்பத்தினரையும் கூட. உங்கள் வீட்டில் முதியவர்கள் இருந்தால், அவர்களைத் தடுப்பூசிப் போட்டுக்கொள்ளும்படி ஊக்குவியுங்கள். அது அவர்களின் உயிரைக் காப்பாற்றக் கூடும். நீங்கள் 60 வயதிற்கும் மேற்பட்டவராக இருந்தால், உங்களுக்காக நாங்கள் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளோம். நீங்கள் எந்தவொரு தடுப்பூசி நிலையத்திற்கோ, பலதுறை மருந்தகத்திற்கோ செல்லலாம். முன்பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

நீங்கள் வந்தால் மட்டும் போதும்; நாங்கள் உங்களுக்கு உடனடியாகத் தடுப்பூசியைப் போட்டுவிடுவோம். உங்களால் நடமாட முடியவில்லை என்றாலோ, தடுப்பூசி நிலையம் அல்லது பலதுறை மருந்தகத்திற்குச் செல்ல முடியவில்லை என்றாலோ, கவலைப்பட வேண்டாம். 1800-650-6060 என்ற எண்ணில் ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்புக்கான உடனடித் தொலைபேசி சேவையை அழையுங்கள். தடுப்பூசிப் போடும் குழுவினர் உங்கள் வீட்டிற்கு வருவார்கள். நான் எனது தடுப்பூசிகளை ஏற்கனவே போட்டுக்கொண்டுவிட்டேன். நீங்களும் போட்டுக்கொள்ளுங்கள். தாமதிக்க வேண்டாம். கவனமாக இருங்கள்! ஆரோக்கியமாகவும், நலமாகவும் இருங்கள்!” என்று கூறியுள்ளார்.