“போதுமான அளவு காய்கறிகள், பழங்கள் கையிருப்பில் உள்ளது”- பேரங்காடிகள் விளக்கம்!

Photo: Yong Jun Yuan/TODAY

சிங்கப்பூரில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்திருந்த கட்டுப்பாடுகள் இன்று (27/09/2021) முதல் அமலுக்கு வந்துள்ளது. மேலும், கொரோனா தடுப்பு பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இந்த நிலையில், பாசிர் பாஞ்சாங் மொத்த விற்பனை நிலையத்தில் பராமரிப்பு மற்றும் சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்வதால் இன்று (27/09/2021) மதியம் 03.00 மணி முதல் மூன்று நாட்களுக்கு விற்பனை நிலையம் மூடப்படும் என்று நேற்று (26/09/2021) அறிவிப்பு வெளியாகியிருந்தது. இதனால், பழங்கள், காய்கறிகள் விநியோகத்தில் சில இடையூறுகள் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்திருந்தது.

சிங்கப்பூரில் முன்னெப்போதும் இல்லாத அளவில் புதிய உச்சத்தில் கொரோனா பாதிப்பு!

இந்த மொத்த விற்பனை நிலையத்தில் இருந்து மற்ற கடைகள் மற்றும் பேரங்காடிகளுக்கு காய்கறிகள், பழங்கள், உள்ளிட்ட உணவுப் பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. மொத்த விற்பனை நிலையம் மூடப்படும் என்று வெளியான அறிவிப்பால். பழங்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்டவற்றை வாங்க வாடிக்கையாளர்கள் பேரங்காடிகளில் குவிந்தனர்.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள NTUC FairPrice, Giant, Sheng Siong பேரங்காடிகள், “நிலைமையைத் தொடர்ந்து உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். வாடிக்கையாளர்களுக்குப் போதுமான அளவில் உணவுப் பொருள்களை வழங்குவதற்கு தேவையான அளவு பொருள்கள் தங்களிடம் கையிருப்பில் உள்ளது. பல இடங்களில் இருந்து தங்களுக்கு பழங்கள், காய்கறி இறக்குமதியாவதால் நிலைமையைச் சமாளிக்க முடியும். பேரங்காடிகளின் கிளைகளுக்குப் போதுமான அளவில் பொருள்களைக் குறித்த காலத்தில் கொண்டு சேர்க்க ஊழியர்கள் அயராது உழைத்து வருகின்றன. மக்களுக்கு வேண்டிய பொருள்கள் இருப்பது உறுதி செய்யப்படும். பொதுமக்கள் தங்களுக்குத் தேவையானவற்றை மட்டும் வாங்கிக் கொள்ள வேண்டும்; பொருள்களை வாங்கிக் குவிக்க வேண்டாம்” என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

முதியவர்களுக்கு பழையனவற்றை நினைத்துப் பார்ப்பதில் ஆனந்தம்!

அதேபோல், பாசிர் பாஞ்சாங் மொத்த விற்பனை நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது, தங்களைப் பெரிய அளவில் பாதிக்கவில்லை என Cold Storage, Giant பேரங்காடிகள் தெரிவித்துள்ளனர்.