சிங்கப்பூர் அமைச்சர்களுடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் சந்திப்பு!

Photo: External Affairs Minister of India Official Twitter Page

வரும் ஜூலை 7 மற்றும் ஜூலை 8 ஆகிய இரு நாட்கள் இந்தோனேசியா நாட்டின் பாலி நகரில் நடைபெறவுள்ள ஜி20 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் உயரதிகாரிகள் உள்ளிட்டோர் விமானம் மூலம் புறப்பட்டனர்.

சிங்கப்பூரில் பணியில் இருந்த தமிழ் ஊழியர் மீது தாக்குதல் (Video) – வலுக்கும் கண்டனம்!

பாலி செல்லும் வழியில் சிங்கப்பூருக்கு சென்ற இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர், சிங்கப்பூரின் பாதுகாப்புத்துறை அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென் மற்றும் சிங்கப்பூர் நிதித்துறை அமைச்சரும், துணை பிரதமருமான லாரன்ஸ் வோங் ஆகியோரை இன்று (06/07/2022) தனித்தனியே நேரில் சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பில் இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையேயான உறவுகள், பொருளாதாரம், கொரோனா நோய்த்தொற்று பரவல், சரக்கு ஏற்றுமதி, இறக்குமதி உள்ளிட்டவைக் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், சிங்கப்பூர் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல் கூறுகின்றன.

கிடுகிடுவென உயரும் சில்லறை வர்த்தகம் – சிங்கப்பூரின் பொருளியல் நிபுணர்கள் ஆய்வு

சிங்கப்பூர் நிதித்துறை அமைச்சருடனான சந்திப்பு குறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர், “சிங்கப்பூரில் துணை பிரதமரும், நிதித்துறை அமைச்சருமான லாரன்ஸ் வோங்கைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. இரு தரப்பு கூட்டாண்மையை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்வது குறித்து விவாதித்தோம். மேலும் உலக அரசியல் மற்றும் பொருளாதார நிலை குறித்தும் கருத்துகளை பரிமாறிக் கொண்டோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Photo: External Affairs Minister of India Official Twitter Page

சிங்கப்பூர் பாதுகாப்புத்துறை அமைச்சருடனான சந்திப்பு குறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், “இன்று மதியம் எனக்கு விருந்தளித்ததற்காக சிங்கப்பூர் பாதுகாப்புத்துறை அமைச்சர் இங் எங் ஹென்னுக்கு நன்றி. எங்களது உரையாடலை ரசித்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.