உணர்வு ரீதியாகக் கூட ஒருவரை துன்புறுத்தக் கூடாது! – சிங்கப்பூரில் அதிகரிக்கும் குடும்ப வன்முறைப் புகார்கள்;போலீஸ் நடவடிக்கை!

public entertainment outlets violating Covid-19

சிங்கப்பூரில் குடும்ப சண்டையில் ஏற்படும் வன்முறைத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்க காவல்துறை கூடுதல் முயற்சிகளை மேற்கொள்கிறது.குடும்பம் என்றாலே கருத்து வேறுபாடு,விவாதம்,வாக்குவாதம் என பல பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும்.

அதனைக் கையாளும் முறை தெரிந்தவர்கள் குடும்பத்தை சுமூகமாக நடத்துவார்கள்.ஆனால்,ஒருவருக்கொருவர் முரணான கருத்துகளை முன்வைத்து வாக்குவாதத்தை வன்முறையாக மாற்றுவது விபரீத விளைவை ஏற்படுத்திக் கொள்பவர்களும் உண்டு.

இந்த வருடத்தின் முதற்பாதியில் மட்டும் சுமார் 2,600க்கும் அதிகமான புகார்கள் குடும்ப வன்முறை தொடர்பாக பதிவாகியுள்ளதாக சிங்கப்பூர் காவல்துறை கூறுகிறது.இந்த புகார்களின் எண்ணிக்கை 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 40 சதவீதம் அதிகம் என்பதை புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துகின்றன.

இது போன்ற வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த வகையில் உதவலாம் என்று காவல்துறை அதிகாரிகள் பலரும் பயின்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மோசமான குடும்ப வன்முறை நிகழ்வுகள்,அதைக் கையாளும் சிறப்புப் புலனாய்வுக் குழுக்களிடம் ஒப்படைக்கப்படுவதன் மூலம் இவற்றைக் கட்டுப்படுத்தலாம்.

குடும்ப வன்செயல் என்பது உடல்ரீதியானது மட்டுமின்றி மன ரீதியான மற்றும் உணர்வு ரீதியான துன்புறுத்தலும் அடங்கும்.ஆம்,”குடும்ப உறுப்பினரே என்றாலும் ஒருவரை துன்புறுத்துவது முறையல்ல” என்பது அனைவரும் புரிந்துகொள்ள வேண்டிய ஒன்றாகும்.

எதிர்வரும் ஆண்டு ஜூன் மாதம் முதல் வழங்கப்படவுள்ள புதிய கையேடுகளில் அத்தகைய விவரங்கள் இடம்பெற்றிருக்கும். குடும்ப துன்புறுத்தல் குறித்துப் பொது மக்களுக்கு கூடுதலான விழிப்புணர்வு தேவை என்றும் சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.