உணவகத்தில் இருந்து உயிருடன் நண்டுகளைத் திருடிய நபருக்கு சிறை!

Photo: House of Seafood Official Facebook Page

 

சிங்கப்பூரில் வசித்து வருபவர் அப்துல் கரீம் முகமது (Abdul Karim Mohamad). இவருக்கு வயது 60. இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் 21- ஆம் தேதி இரவு 07.45 PM மணியளவில் தனது சகோதரருடன் புங்க்கோல் செட்டில்மென்ட்டில் (Punggol Settlement) இருந்தபோது, ஹவுஸ் ஆஃப் சீஃபுட் உணவகத்தில் (House Of Seafood Restaurant) ஒரு பெரிய மீன் தொட்டியைக் கண்டார். தொட்டியின் உள்ளே உயிருடன் பல நண்டுகள் இருந்தன.

அப்துல் கரீம் முகமது நண்டுகளை எடுத்து தனது சகோதரரிடம் ஒப்படைக்க, அவர் ஒரு பிளாஸ்டிக் பையில் (Plastic Bag) வைக்கத் தொடங்கினார். தலா 140 சிங்கப்பூர் டாலர் மதிப்புள்ள ஐந்து பெரிய நண்டுகள் மற்றும் தலா 29 சிங்கப்பூர் டாலர் மதிப்புள்ள ஆறு நண்டுகள் என 11 நண்டுகள் உயிருடன் திருடப்பட்டு பிளாஸ்டிக் பையில் வைக்கப்பட்டிருந்தது. திருடப்பட்ட நண்டுகளின் மொத்த மதிப்பு 800 சிங்கப்பூர் டாலருக்கும் அதிகமாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

பின்னர், இருவரும் உணவகத்தை விட்டு வெளியேற முயன்றனர். அப்போது, உணவகத்தில் ஒரு வாடிக்கையாளர் மேலாளரை எச்சரித்தார். அதன் தொடர்ச்சியாக மேலாளர், அந்த இருவரையும் நிற்கும் படி கத்தினார். ஆனால் இருவரும் ஓடினர். இருப்பினும், இறுதியில் ஊழியர்களால் பிடிக்கப்பட்டு நண்டுகளைத் திருப்பித் தரும்படி செய்தனர். இது குறித்து ஒரு புங்க்கோல் ஜெட்டி அதிகாரி (Punggol Jetty Officer) காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

பக்தர்களின் வருகை குறித்து ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயில் நிர்வாகத்தின் அறிவிப்பு!

இதையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் அப்துல் கரீம் முகமது மற்றும் அவரது சகோதரரை கைது செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நேற்று (22/07/2021) நடைபெற்றது. அப்போது, அப்துல் கரீம் முகமது மீது செங்காங்கில் (Sengkang) நேர்மையற்ற முறையில் இரண்டு பை உணவுப் பொருள்களை எடுத்து சென்ற போது, அவர் முகக்கவசத்தை சரியாக அணியவில்லை என்ற குற்றச்சாட்டும் நீதிமன்றத்தில் முன் வைக்கப்பட்டது. மேலும், திருட்டு நடந்த நேரத்தில் அப்துல் கரீம் முகமது வேலை இல்லாமல் இருந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, அப்துல் கரீம் முகமது, திருடிய பொருள்களை விற்று, உணவு வாங்குவதற்காக அவ்வாறு செய்ததாக அவர் ஒப்புக்கொண்டார். மேலும், தான் ஆஸ்துமா, உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் குறைந்த பட்ச தண்டனையை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து நீதிபதி, அப்துல் கரீம் முகமதுக்கு ஒரு வாரச் சிறைத்தண்டனையும், முகக்கவசம் சரியாக அணியாதற்காக 1,000 சிங்கப்பூர் டாலரையும் அபராதமாக விதித்து உத்தரவிட்டார்.

திருடப்பட்டதைப் பெற்றதற்காக அவரது சகோதரருக்கு 12 மாத நிபந்தனை எச்சரிக்கை வழங்கப்பட்டது.