‘பயணக் கட்டுப்பாட்டை நீக்கிய சிங்கப்பூர் அரசு’- மகிழ்ச்சி தெரிவித்துள்ள இந்திய தூதரகம்!

Photo: High Commission of India in Singapore Official Facebook Page

சிங்கப்பூர் அரசு சரவதேச பயணக் கட்டுப்பாட்டைத் தொடர்ந்து தளர்த்தி வருகிறது. அந்த வகையில், அரசு நேற்று (23/10/2021) வெளியிட்டிருந்த அறிவிப்பில், “இந்தியா, வங்கதேசம், மியான்மர், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள் சிங்கப்பூருக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் முறையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இந்த புதிய நடைமுறைகள் வரும் அக்டோபர் 26- ஆம் தேதி அன்று நள்ளிரவு 11.59 PM மணி முதல் அமலுக்கு வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் மேலும் 3,598 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி!

இந்த நிலையில், இந்தியா மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த முன்னணி விமான நிறுவனங்கள் அதிகளவில் விமானங்களை இயக்க ஆயத்தமாகி வருகின்றன. மேலும் இரு நாடுகளுக்கும் வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எந்தெந்த நாடுகளைச் சேர்ந்த பயணிகள் சிங்கப்பூருக்கு வரலாம்? – முழுமையான விவரங்கள்!

இந்தியா உடனான பயணக் கட்டுப்பாட்டை சிங்கப்பூர் அரசு தளர்த்தியதற்கு, சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகம் (High Commission of India in Singapore) வரவேற்பு தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய தூதரகம் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “சிங்கப்பூருக்கு பயணம் செய்யும் நாடுகளின் பட்டியலில் இருந்து இந்தியா மற்றும் மற்ற சில நாடுகளை நீக்கி இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் வருவதற்கு சிங்கப்பூர் அரசு அனுமதித்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நிலுவையில் உள்ள மற்ற பிரச்சனைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்ந்து உரையாடி வருகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளது.