சிங்கப்பூருக்கு வருங்காலமே இல்லையென்று சொன்னவர்களின் முகத்தில் கரியை பூசிய சம்பவம் – இன்னைக்கும் “கெத்து” குறையாமல் நிற்கும் பின்னணி..!

Singaporeans will stay united and prevail once more - PM Lee
(Photo: MINDEF, MND and WOHA Architects)

1959-ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் சிங்கப்பூருக்கு சுயாட்சி கொடுத்தனர். இடையில் மலேசியாவுடன் இணைந்திருந்தாலும், அதிலிருந்தும் வெளியேற்றப்பட்டு 1965-ஆம் ஆண்டு தனி சுதந்திர நாடானது.

1965-ஆம் ஆண்டு, சிங்கப்பூரின் பிரதமரான லீ க்வான் யூ சுதந்திர பிரகடனத்தைப் படித்தார். அன்று பலரும் சிங்கப்பூருக்கு வருங்காலமே இல்லையென்றும், மிகச்சிறிய நாடென்பதால் எப்படியும் வேறு நாடுகள் அதைக் கைப்பற்றிவிடும் என்றெல்லாம் பேசப்பட்டது.

அப்பேர்ப்பட்ட நிலையிலிருந்த சிங்கப்பூரை லீ க்வான் யூ மாற்றியமைத்தார். அதற்குப் பல அடிப்படைக் காரணங்கள் உண்டு. அதனை தெளிவாக விவரித்துள்ளார் எழுத்தாளர் சந்திரமெளலி.

முதலும் முக்கியமுமான காரணம், சிங்கப்பூர் அளவில் சிறியது. மேலும், மக்கள் பெரும்பாலும் ஒரு ஒருங்கிணைந்த பண்பாட்டைக் கொண்டிருந்தனர். மக்களின் எண்ண ஓட்டத்தைப் புரிந்துகொண்டு அவர்களை வளர்ச்சிக்கான விஷயங்களை நோக்கித் திருப்புவது எளிதாயிருந்தது.

சுதந்திரம் பெற்றதிலிருந்தே வெளிநாட்டு முதலீடுகளைப் பெறுவதில் லீ க்வான் யூ கவனம் செலுத்தினார். இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய இரு நாடுகளிடமும் ராணுவ ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஒத்துழைப்புக்கான பல ஒப்பந்தங்கள் செய்துகொண்டார்.

ஐந்தாம் இடத்தில் இருந்த துறைமுகத்தை 17 வருடங்களுக்குள் உலகின் முதலிடத்துக்கு வரச் செய்தார். அதன் மூலம் உயர் கல்வி இல்லாதோர்க்கும் நிலையான ஒரு வேலையும், அரசாங்கத்துக்குச் சீரான ஒரு வருமானமும் கிடைக்க வழி செய்தார்.

நாட்டின் வளர்ச்சி என்று வரும்போது, அதில் எந்தவித சமரசம் செய்து கொள்ளாமல் இருந்தார். அதற்காகக் கொஞ்சம் கடுமையான சட்டங்கள் இயற்றுவதும், அதைச் செயல்படுத்துவதும் தேவைப்பட்டது. அவற்றைத் தைரியமாகச் செய்தார்.

தன் சுயசரிதையான ‘From the Third World to the First’ என்ற புத்தகத்தில் மேலே சொல்லப்பட்டிருப்பவை உட்பட பல விஷயங்களை விவரித்திருக்கிறார்.