கடல் உணவுகளை வாங்கிவிட்டு காசு கொடுக்காமல் காரில் தப்பியோடிய நபர் – கடையின் உரிமையாளர் பேஸ்புக்கில் கண்டனம் !

live seafood

பார்ட்லி கிழக்கு ரோட்டில் உள்ள தொழிற்பேட்டையில் உள்ள ஒரு கடையில் நேரடி கடல் உணவுகளை வாங்கிவிட்டு S$334.50 பில் செலுத்தாமல் ஒருவர் காரை ஓட்டிச் சென்றுள்ளார். பணத்தை திரும்ப செலுத்துமாறு வாகனத்தின் ஓட்டுநருக்கு பேஸ்புக்கில் கோரிக்கை ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது.

அப்பதிவில் ரசீது, செலுத்த வேண்டிய தொகை மற்றும் தப்பிச்சென்ற மெர்சிடிஸ் காரின் புகைப்படம் ஆகியவை இருந்தன. மேலும் அந்த தப்பிச்சென்ற வாடிக்கையாளரின் பெயர் ஜியா என்றும் கூறப்பட்டுள்ளது.

செப்.19 திங்கள்கிழமை இரவு 7.50 மணியளவில் நியூ இண்டஸ்ட்ரியல் ரோட்டில் உள்ள The Morning Catch Seafood உணவகத்திற்கு தன் காரில் வந்த நபர், S$334.50 மதிப்புள்ள மூன்று அமெரிக்க இரால், ஒன்பது மான்டிஸ் இறால், ஒன்பது குட்டி அபலோன்கள் மற்றும் 1 கிலோ நண்டுகளை வாங்கியுள்ளார்.

கடையில் இருந்த ஒரு ஊழியர் சரக்குகளை பேக் செய்ய மற்றொருவர் பில்லைக் கையாண்டு கொண்டிருந்திருக்கிறார். அப்போது அவர் கடையின் உரிமையாளரை தனக்குத் தெரியும் என்றும், பொருட்களை வாங்கிய பின் பணப் பரிமாற்றம் செய்வதாகவும் கூறியுள்ளார்.

பில்லிற்கு தேவையான பணம் மற்றும் அவரது தொடர்பு விவரங்களைக் கேட்ட போது ​​​​கடல் உணவைச் சமாளிக்க அவர் விரைந்து செல்ல வேண்டும் என்று கூறிவிட்டு காரில் தப்பிச்சென்றுள்ளார். தப்பிச்சென்ற மெர்சிடஸின் புகைப்படத்தை அங்கிருந்த ஊழியர் எடுத்துள்ளார். மேலும் கடை உரிமையாளருக்கு அந்த நபரை தெரியாது என்பதும் பின்னர் தெரியவந்துள்ளது.

மேலும் அவரது முகம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகவில்லை என்றும் கடையின் உரிமையாளர் கூறியுள்ளார். கடை ஆரம்பித்து இரண்டு வருடங்களில் இதுபோன்ற சம்பவம் நடப்பது இதுவே முதல் முறை என்றும் உரிமையாளர் கூறியுள்ளார். மேலும் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களைப் பற்றி தனது ஊழியர்கள் இப்போது மிகவும் எச்சரிக்கையாக இருப்பதாகவும், அவர்களைக் கையாள்வதில் மிகவும் கவனமாக இருப்பார்கள் என்றும் கடையின் உரிமையாளர் கூறியுள்ளார்.

மேலும் பணத்தைத் திருப்பிச் செலுத்துவதற்காக ஐந்து நாட்கள் கால அவகாசம் அளித்திருப்பதாகவும் இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.