மலேசியர்கள் வெளிநாடு செல்லத் தடை; கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள் மூடல்..!

(Photo : Straits Times)

புதன்கிழமை முதல் தொடங்கி சுமார் இரண்டு வாரங்களுக்கு மலேசியா குடிமக்கள் வெளிநாட்டிற்கு செல்லவும், வெளிநாட்டினர் மலேசியாவிற்குள் நுழையவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் முஹைதீன் யாசின் திங்கள்கிழமை (மார்ச் 16) தொலைக்காட்சியில் உரையாற்றியுள்ளார்.

அதன்படி, மார்ச் 18 முதல் மார்ச் 31 வரை அனைத்து மலேசியர்களும் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெளிநாட்டிலிருந்து மலேசியா திரும்பி வரும் குடிமக்கள் மருத்துவ சோதனைகள் செல்லவும், 14 நாட்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ளவேண்டும் என்று திரு முஹைதீன் கூறியுள்ளார்.

இந்த தடை காலகட்டத்தில் சுற்றுலாப் பயணிகள் உட்பட வெளிநாட்டு வருகையாளர்கள் யாரும் மலேசியாவிற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமய நிகழ்வுகள், விளையாட்டுகள், சமூக மற்றும் கலாச்சார நடவடிக்கைகள் உட்பட பொதுக்கூட்டங்கள் அனைத்திற்கும் தடை செய்யப்படும், என்றும் கூறியுள்ளார்.

இதில் பல்பொருள் அங்காடிகள் (supermarkets), மளிகைக் கடைகள் மற்றும் அன்றாட தேவைகளை நிறைவுசெய்யும் கடைகள் தவிர, அனைத்து வழிபாட்டுத் தலங்களும் வணிக வளாகங்களும் மூடப்பட வேண்டும் என்று திரு முஹிதீன் கூறினார்.

மேலும், அனைத்து பள்ளிகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களும் மூடப்படும், என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு மலேசிய ஊழியர்கள் வேலைக்குச் செல்ல அனுமதி இல்லை என்று மலேசியக் குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளதாக “செய்தி” குறிப்பிட்டுள்ளது.

மேலும், மலேசிய ஊழியர்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்கு வேலை தொடர்பாக பக்கத்து நாடுகளுக்குச் சென்றுவர இயலாது என்று மலேசியக் குடிநுழைவுத்துறை தெரிவித்துள்ளது என்றும் அது குறிப்பிட்டுள்ளது.