9,20,000- க்கும் மேற்பட்ட வாய் கொப்பளிக்கும் இலவச திரவ பாட்டில்களை விநியோகம் செய்த டெமாசெக் அறக்கட்டளை!

Photo: Temasek Foundation Official Facebook Page

சிங்கப்பூரில் அரசுடன் இணைந்து டெமாசெக் அறக்கட்டளை நிறுவனம் (Temasek Foundation) பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் பல்வேறு சேவைகளைத் தொடர்ச்சியாக செய்து வருகிறது. உள்நாட்டு மக்களுக்கு மட்டுமின்றி, உதவி கோரும் வெளிநாடுகளுக்கும் உதவி வருகின்றது டெமாசெக் அறக்கட்டளை.

‘CDC’ பற்றுச்சீட்டுகள் திட்டத்தைத் தொடங்கி வைத்த சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்!

கொரோனா காலத்தின் போது, சிங்கப்பூரில் உள்ள ஒவ்வொரு சிங்கப்பூரர்கள் குடும்பத்திற்கும் தலா ஒரு ஆக்சிமீட்டர் கருவியை இலவசமாக வழங்கியது. அதைத் தொடர்ந்து, ஒவ்வொரு குடும்பத்திற்கும் இலவச முகக்கவசங்களையும் வழங்கியிருந்தது.

அதன் தொடர்ச்சியாக, தற்போது டெமாசெக் அறக்கட்டளை நிறுவனம், ஒன்று முதல் நான்கு அறைகள் கொண்ட வீடமைப்பு வளர்ச்சி கழகத்தின் குடியிருப்புகளில் (1 to 4-room HDB Flats) வசிக்கும், அனைத்து குடும்பங்களுக்கும், 125 மி.லி. அளவு கொண்ட ‘Mouth Gargle’ எனப்படும் இலவச வாய் கொப்பளிக்கும் திரவத்தை சிங்கப்பூர் அஞ்சல்துறையுடன் (Singapore Post) இணைந்து விநியோகம் செய்து வந்தது.

Omicron கிருமியை எதிர்கொள்ள தயாராகும் சிங்கப்பூர்: “பூஸ்டர்” தடுப்பூசி முக்கிய பகுதியாக இருக்கும் – பிரதமர் லீ

அதேபோல், மற்ற குடியிருப்புகளில் வசிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் 250 மி.லி. அளவுக் கொண்ட வாய் கொப்பளிக்கும் திரவம், அதற்காக அமைக்கப்பட்ட விநியோக நிலையங்கள் (Self Collection Point) மூலம் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினத்துடன் (12/12/2021) வாய்க் கொப்பளிக்கும் திரவத்தை விநியோக நிலையங்கள் மூலம் விநியோகம் செய்யும் பணி நிறைவடைந்தது. இந்த நிலையில், வாய்க் கொப்பளிக்கும் திரவத்தை எத்தனை குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது என்பது தொடர்பான அறிவிப்பை அறக்கட்டளை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, வாய் கொப்பளிக்கும் திரவம் சுமார் 9,20,000- க்கும் மேற்பட்ட பாட்டில்கள் சிங்கப்பூரில் உள்ள குடும்பங்களுக்கு (Singapore Households) விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதில், 7,80,000 பாட்டில்கள் சிங்கப்பூர் அஞ்சல்துறை மூலம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் எங்களுடன் இணைந்து விநியோகம் செய்யும் பணிகளை மேற்கொண்ட அனைத்து நிறுவனங்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.