சிங்கப்பூர் தேசிய தினம்- இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் வாழ்த்து!

Photo: Minister Vivian Balakrishnan Official Facebook Page

 

சிங்கப்பூரின் 56- வது தேசிய தினம் (National Day Of Singapore) இன்று (09/08/2021) கொண்டாடப்பட்டது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பொதுமக்கள் தங்கள் இல்லங்களில் தேசிய தினத்தைச் சிறப்பாகக் கொண்டாடினர். அதேபோல், சுமார் 600 பங்கேற்பாளர்களுடன் தேசிய தின சடங்கு பூர்வ அணி வகுப்பு இன்று (09/08/2021) காலை 09.00 மணிக்கு Float@Marina Bay-ல் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அதிபர் ஹலிமா யாக்கோப், பிரதமர் லீ சியன் லூங், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர். எனினும், பொதுமக்களுக்கு அனுமதியில்லை. நிகழ்ச்சியை பொதுமக்கள் வீட்டிலிருந்தே பாதுகாப்பாகக் கண்டு ரசிக்கும் வகையில் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

தேசிய தினத்தையொட்டி, சிங்கப்பூர் முழுவதும் உள்ள முக்கிய கட்டிடங்கள், நினைவு சின்னங்கள் வண்ண மின் விளக்குகளால் ஜொலிக்கிறது. மேலும், அனைத்து தரப்பினரும் கவலையை மறந்து தேசிய தினத்தை ஒன்றுபட்டு கொண்டாடினர்.

தேசிய தினம் 2021: சாங்கி விமான நிலையம் வெளியிட்ட பிரத்தியேக காணொளி.!

உலகில் பல்வேறு நாடுகளின் தலைவர்களும் சிங்கப்பூர் மக்களுக்கும், அரசுக்கும் தேசிய தின வாழ்த்துகளை சமூக வலைத்தளங்கள் மூலமும், கடிதம் மூலமும் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், சிங்கப்பூர் மக்கள் மற்றும் அரசுக்கு தேசிய தின வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியா- சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளும் நட்பு நாடுகளாக திகழ்கின்றன. இந்தியா கொரோனா இரண்டாவது அலையால் கடும் பாதிப்பைச் சந்தித்தது. குறிப்பாக, கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள், மருத்துவ ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், கப்பல், விமானங்கள் மூலம் திரவ ஆக்சிஜனை மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்களை அனுப்பியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.