“அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!”- சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்!

Photo: Singapore Prime Minister Lee Hsien Loong Official Facebook Page

சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் இன்று (31/12/2021) வெளியிட்டுள்ள 2022- புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், “நாம், கடந்த ஈராண்டாக கோவிட்-19 கிருமிப்பரவலுடன் போராடி வருகிறோம். இது, ஒரு நீண்ட, சிரமமான போராட்டாமாக இருந்துள்ளது. உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் பாதுகாக்க, நாம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டோம். நம் வரலாற்றிலேயே, முதன் முறையாக நமது எல்லைகளை மூடினோம். ஊழியர்களுக்கும் தொழில்களுக்கும் ஆதரவளிக்க, நமது கடந்த கால இருப்புகளை அதிக அளவில் பயன்படுத்தினோம். நாம் வாழ்வதற்கும், வேலை செய்வதற்கும், கற்றுக்கொள்வதற்கும் புதிய வழிகளைக் கண்டறிந்து, அவற்றுக்கு ஏற்ப நம்மை விரைவாக மாற்றிக்கொண்டோம்.

“ரெட் லைட்” சிக்னலை மதிக்காமல் சென்ற ஓட்டுநர் – கண்ணிமைக்கும் நேரத்தில் நேர்ந்த எதிர்மறை விளைவு (காணொளி)

அதன் விளைவாக, நாம் நமது சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்பை மீள்திறன் மிக்கதாக வைத்தோம்; பல உயிரிழப்புகளைத் தடுத்தோம். அரசாங்க வரவுசெலவுத் திட்டங்கள், வேலைகளைத் தக்கவைத்துக்கொண்டன; பொருளியலைச் சீர்படுத்தின. ஒவ்வொரு தருணத்திலும், சிங்கப்பூரர்கள் ஒருவருக்கொருவர் ஆதரவளிக்க, வலிமையையும், மனவுறுதியையும் வெளிக் கொண்டு வந்தனர். பலர் தங்கள் கடமைக்கும் அப்பாற்பட்டுச் செயல்பட்டனர். குறிப்பாக, நமது முன்னிலை ஊழியர்களும், சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களும் அயராது பாடுபட்டுள்ளனர். அதிகம் காணப்படாத சூழல்களில், தொழில்கள் மட்டுமல்லாமல் அன்றாட செயல்வீரர்களும், துணிவையும், பொது உணர்வையும் வெளிப்படுத்தி, சிங்கப்பூர் தொடர்ந்து முன்னோக்கிச் செல்வதையும், அனைவரும் பாதுகாப்பாக இருப்பதையும் உறுதிசெய்துள்ளனர்.

விளையாட்டுகளைப் பொறுத்துவரை, டோக்கியோவில் யிப் பின் சியூ, நீச்சலில் இரண்டு தங்கப் பதக்கம் வென்றதை நாம் கொண்டாடினோம். சிங்கப்பூர்க் கொடியை உயரப் பறக்கச் செய்த நமது ஒலிம்பிக் வீரர்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தினோம். உலகளாவிய போட்டிகளில், அலொய்ஷியஸ் யப் பில்லியர்ட்ஸ் (Billiards) விளையாட்டிலும், ஷேனா இங் உருட்டுப் பந்துப் போட்டியிலும் முதல் நிலையை எட்டினர். அதோடு, இவ்வாண்டு வெற்றிகரமாக நிறைவடைந்தது, சுஸுக்கி கிண்ணப் போட்டியில், சிங்கப்பூர் அணி துணிவையும் மனவுறுதியையும் பறைசாற்றியது; லொ கியென் இயூ முதன்முறையாக நமது உலகப் பூப்பந்து வெற்றியாளரானார். இந்தச் சவால்மிக்க காலகட்டத்தில், சிங்கப்பூர்க் குழு வெளிப்படுத்திய அதன் சிறப்பான உணர்வு நமக்கு ஊக்கமளித்துள்ளது; பெருமை சேர்த்துள்ளது.

புத்தாண்டில் அடியெடுத்து வைக்கும் வேளையில், கோவிட்-19க்கு எதிரான போராட்டம் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. ஓமிக்ரான் கிருமிவகை புதிய நிச்சயமற்ற சூழல்களைக் கொண்டு வந்துள்ளது. நல்லவேளையாக, ஈராண்டுக்கு முன்னருடன் ஒப்பிடுகையில், நமது நிலை தற்போது மேலும் வலுவடைந்துள்ளது. நாம் கூடுதல் (booster) தடுப்பூசிகளை அறிமுகப்படுத்தியுள்ளோம். 12 வயதுக்குக் குறைவான பிள்ளைகளுக்குத் தடுப்பூசி போடத் தொடங்கிவிட்டோம். பொருளியலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பைக் குறைக்கும் அதே வேளையில், பொதுச் சுகாதாரத்திற்கான சவால்களை மேம்பட்ட வகையில் சமாளிக்கவும் நாம் கற்றுக்கொண்டுள்ளோம். ஓமிக்ரான் கிருமிவகை ஏற்படுத்தக்கூடிய தாக்கத்திற்கு நம்மை ஆயத்தப்படுத்திவரும் வேளையில், எதிர்காலத்தில் எது வந்தாலும், அதனைச் சமாளிப்போம் என்ற நம்பிக்கையை நாம் கொண்டிருக்கலாம்.

சிங்கப்பூரில் கனமழை: திடீர் வெள்ளம் ஏற்படும் அபாயம் – எச்சரிக்கை

நமது உடனடிப் பணிகள், கோவிட்-19ஐ சமாளிப்பதற்கும் அப்பாற்பட்டவை. கிருமிப்பரவலுக்குப் பிந்திய பொருளியலில், செழிப்பு, புதிய வேலைகள், புதிய வளர்ச்சி ஆகியவற்றை நாம் தொடர்ந்து உருவாக்கிவரவேண்டும். பல அம்சங்கள் , நிலையான உலக, வட்டாரச் சூழலைச் சார்ந்துள்ளன. அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையிலான உறவு அவற்றில் முக்கியமான ஒன்றாகத் திகழ்கிறது. அந்த இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வேறுபாடுகள் தொடர்கின்றன. ஆனால், அண்மையில் பருவநிலை மாற்றம் குறித்த அவற்றின் உயர்நிலை சந்திப்புகளும், ஒத்துழைப்பும் சற்று நம்பிக்கை அளிக்கின்றன.

நம் பங்கிற்கு, சிங்கப்பூர் அருகிலும் தொலைவிலும் உள்ள பங்காளிகளைத் தொடர்ந்து ஈடுபடுத்திவரும். நமது மக்களின் நன்மைக்காக, நாம் வர்த்தகத் தாராளமயமாதலையும் வட்டார ஒருங்கிணைப்பையும் தொடர்ந்து பின்பற்றி வருவோம். 2022- ஆம் ஆண்டின் முதல் நாளன்று நடப்புக்கு வரும் விரிவான, வட்டாரப் பொருளியல் பங்காளித்துவமும் இதில் அடங்கும்.

வரும் ஆண்டு, மாற்றத்திற்கு இடைப்பட்ட காலகட்டமாக இருக்கும். நமது பொருளியல் நிலையாக மீட்சி பெற்று வருகிறது. இடையூறுகளைக் கருத்தில் கொண்டு, உலகப் பொருளியல் மீட்சிக்கு ஏற்ப நமது பொருளாதாரம் விரிவடையும். 2022- ஆம் ஆண்டில் நமது மொத்த உள்நாட்டு உற்பத்தி மூன்றிலிருந்து ஐந்து விழுக்காடு வரை அதிகரிக்கும் என நாம் எதிர்பார்க்கலாம். தொழில்கள் மீட்சிபெறும்போது, நமது அவசரகால ஆதரவுத் திட்டங்களைப் படிப்படியாக மீட்டுக்கொள்வோம்.

2022 புத்தாண்டில் வழக்கத்தை விட சிங்கப்பூர் குளிர்ச்சியாக இருக்கும் – வானிலை நிலவரம்

சில துறைகள் மீட்சிபெற கூடுதல் காலம் பிடிக்கலாம். ஓமிக்ரான் அனுமதித்தால், எல்லை தாண்டிய பயணத்தை மீண்டும் பாதுகாப்பாகத் தொடங்குவோம்; உலகின் மற்ற பகுதிகளுடன் மீண்டும் இணைவோம். சிங்கப்பூரர்களுக்கு வலுசேர்ப்பதற்கு, நமக்கு முக்கியமாகத் தேவைப்படும், குடிபெயர்ந்த ஊழியர்களையும், அனைத்துலகத் திறனாளர்களையும் வரவேற்கத் தொடர்ந்து முற்படுவோம்.

உடனடி வாய்ப்புகளைத் தாண்டி, நமது நீண்டகால இலக்குகளை அடைய முன்னோக்கிப் பார்க்கிறோம். தற்போதுள்ள பலங்களை மேம்படுத்திக்கொள்ள, நாம் நமது தொழில்துறை உருமாற்றத் திட்டங்களைத் தொடர்ந்து மேற்கொள்வோம். அதோடு நிறுவனங்கள் தங்களை மறுசீரமைத்துக்கொள்ளவும் ஊழியர்கள் தங்களின் திறன்களை மேம்படுத்திக்கொள்ளவும் உதவுவோம். தொழில்கள், தொழிலாளர் இயக்கம் ஆகியவற்றுடன் இணைந்து, நாம் நமது ஊழியர்களில் தொடர்ந்து முதலீடு செய்வோம்.

அவர்கள் தங்களின் வாழ்க்கைத்தொழில் முழுவதற்கும் உற்பத்தித்திறன் மிக்கவர்களாகவும் வேலை வாய்ப்புகளுக்கு ஏற்புடையவர்களாகவும் இருக்கத் துணைபுரிவோம். மின்னிலக்க, பசுமைப் பொருளியல் உள்ளிட்ட வளர்ச்சிக்கான புதிய துறைகளில் காலூன்றுவோம். நமது அறிவார்ந்த தேசம், சிங்கப்பூர்ப் பசுமைத் திட்டம் 2030 ஆகியவற்றை முன்னெடுத்துச் செல்வோம்.

சிங்கப்பூர் வரும் பயணியா நீங்க?? – அப்போ உங்களுக்கு தான் இந்த தகவல்!

இன்றைய தலைமுறை சிங்கப்பூரர்களுக்கு இந்தக் கிருமிப்பரவல் கடும் சோதனை நிறைந்த ஒன்றாகத் திகழ்ந்துள்ளது. ஒரு மக்களாக ஒன்றிணைந்திருப்பதன் முக்கியத்துவத்தை அது நமக்கு உணர்த்தியுள்ளது. இது நம்மை சோதிக்கும் இறுதி நெருடிக்கடியாக இருக்காது; நமது நாட்டு நிர்மாணப் பயணத்தில் நாம் இன்னும் பல சோதனைகளையும் சவால்களையும் எதிர்நோக்குவோம். நமது சமூகத்தில் இருக்கும் பிளவுக்கோடுகளைப் பாதித்து நம்மை பிளவுப்படுத்தக்கூடிய வலுவான அயலகத் தாக்கங்களை நாம் கடுமையாக எதிர்க்கவேண்டும்.

அவை நமது ஒற்றுமையைச் சீர்குலைக்க, நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. அடுத்தடுத்த தலைமுறையினர் புதிய எண்ணங்களையும் எதிர்பார்ப்புகளையும் கொண்டிருக்கும்போது, நமது சமுதாயப் போக்குகளும் மாற்றம் காணும். சிங்கப்பூரர் என நம்மை அடையாளப்படுத்தும் முக்கிய விழுமியங்களைக் கட்டிக் காக்கும் வண்ணம், நாம் இதனைக் கவனமாகக் கையாளவேண்டும்.

அதன்பொருட்டு, நாம் நமது சமூகக் கருத்திணக்கத்தையும் ஒருமித்த அடையாளத்தையும் வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அரசாங்கம், மக்கள், அனைத்துத் தரப்பு சிங்கப்பூரர்கள் ஆகியோரிடையே நம்பிக்கையையும் பரஸ்பர புரிந்துணர்வையும் நாம் தொடர்ந்து வளர்க்கவேண்டும். கிருமிப்பரவல் காலகட்டத்திலும்கூட, நாம் இந்த முக்கியப் பணியை நிராகரிக்கவில்லை. நாம் பொது மருத்துவமனைகளில் பணிபுரியும் முஸ்லிம் தாதியர் சீருடையுடன் தலையங்கியை அணிய அனுமதித்துள்ளோம். சுயதொழில் புரிவோருக்கான பாதுகாப்பு, ஓய்வுக்காலப் போதுமானத்தன்மை, பெண்களுக்கான ஆதரவு, வேலையிடத்தில் நியாயமாக நடந்துகொள்ளுதல் ஆகியவற்றை மேம்படுத்துவதில் நாம் துடிப்பாகப் பங்காற்றி வருகிறோம்.

வருங்காலத்தில், நமது சமூக இணக்கத்தை வலுப்படுத்த நாம் பாடுபடுவோம். கிருமிப்பரவலால் ஏற்பட்டுள்ள விரிசல்களைச் சரிசெய்தல், பின்தங்கியோருக்கு உதவிக்கரம் நீட்டுதல், உதவி தேவைப்படுவோருக்கான சமூகப் பாதுகாப்பு வலைகளை மேம்படுத்துதல், மக்களின் மனநலச் சுகாதாரத்தில் அக்கறை செலுத்துதல், மூப்படையும் சமூகத்தின் தேவைகளைப் பூர்த்திசெய்தல் ஆகியவை அவற்றுள் அடங்கும். மேலும் நியாயமான, ஒற்றுமையான, அனைவரையும் உள்ளடக்கிய சிங்கப்பூருக்கான பாதை அதுவே.

இவ்வாறு போற்றப்படும் இந்த இலக்குகளை அடைவதற்குத் தேவையான வளங்களை உருவாக்க, நமக்கு துடிப்பான ஒரு பொருளியல் தேவை. அரசாங்கம் தமது சமுதாயத் திட்டங்களை வழிநடத்துவதற்கு நம்பத்தக்க, போதுமான வருவாயைக் கொண்டிருக்க வேண்டும். நமது சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்பு, மூத்த சிங்கப்பூரர்களுக்கான ஆதரவுத் திட்டங்கள் ஆகியவற்றின் விரிவாக்கத்திற்கு நிதியளிக்க, அரசாங்கம் கூடுதல் வருவாயை ஈட்டவேண்டும். மேம்பட்ட நிலையில் இருப்போர் கூடுதலாகப் பங்களிக்கவேண்டும். ஆனால், ஒவ்வொருவரும் சிறிதளவாவது இதற்குப் பங்களிக்கவேண்டும்.

தினசரி விமானங்களை இயக்க உள்ள SIA – ஆனால் இவர்கள் மட்டும் தான் செல்ல முடியும்!

பொருள், சேவை வரி போன்ற பரந்த அடிப்படையிலான வரியை உயர்த்துவதற்கான காரணம் இதுவே. குறைந்த வருமானக் குடும்பங்கள் மீதான தாக்கத்தைத் தணிக்க, விரிவான தள்ளுபடித் திட்டங்களும் இதனுடன் அமல்படுத்தப்படுகின்றன. நமது வரி, பரிமாற்றக் கட்டமைப்பில், பொருள், சேவை வரி முக்கிய அங்கம் வகிக்கிறது. அக்கட்டமைப்பில் வருமான வரி, சொத்து வரி ஆகியவையும் உள்ளன. மொத்தத்தில், நமது வரிக் கட்டமைப்பு நியாயமானதாகவும் படிப்படியாக உயரும் ஒண்றாகவும் தொடர்ந்து திகழும்.

சில ஆண்டுகளாக, இதற்கான தேவை இருப்பதை நாம் உணர்ந்திருக்கிறோம். இப்போது நமது பொருளியல் கொவிட்-19 தாக்கத்திலிருந்து மீண்டு வருவதால், நாம் இதனைச் செயல்படுத்தத் தொடங்கியாகவேண்டும். எனவே, சிங்கப்பூரின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்குத் தேவையான நீடித்து நிலைக்கவல்ல அரசாங்க நிதிகளுக்கான வலுவான அடித்தளத்தை 2022-ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் அமைத்துக் கொடுக்கும்.

இந்தக் கிருமிப்பரவல் காலகட்டம் முழுவதும் நாம் ஒன்றாக நின்றோம்; கடினமான முடிவுகளை ஆதரித்தோம்; பல தியாகங்களைச் செய்தோம்; பாதுகாப்பாக மீண்டு வந்தோம். நாம் ஒரு மக்களாக மிளிர்ந்தோம் என்று நம்பிக்கையுடன் கூறமுடியும். நெருக்கடிக் காலகட்டத்தில், பரவலான நன்மை கருதி, கடினமான முடிவுகளை ஏற்றுக்கொள்ளவேண்டிய அவசியத்தை அனைவரும் உணர்ந்தனர். முன்னோக்கிப் பார்க்கும்போது, நீண்டகாலச் சவால்களை நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. நாம் இப்போதிருக்கும் அதே ஒருமித்த நோக்கம், மனவுறுதி, கடினமான நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் ஆகியவற்றைக் கொண்டிருக்கவேண்டும். அப்போதுதான், நம்மால் எதிர்காலச் சவால்களைத் திடமாக எதிர்கொண்டு, தொடர்ந்து ஒன்றாக முன்னேற முடியும். இப்படித்தான், யாரும் பின்தங்கிவிடாது, அனைவருக்கும் உரிய இடம் கொண்ட சிங்கப்பூரை நாம் உருவாக்குவோம்.

ஒரு சிங்கப்பூராக, ஒரு மக்களாக நாம் ஒன்றிணைந்து இருப்போம்; எப்போதும் முன்னோக்கிப் பார்ப்போம்; உலகில் நமது இடத்தைத் தக்கவைத்து கொள்வோம்; ‘இல்லம்’ என நாம் பெருமிதத்துடன் கூறக்கூடிய, அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமுதாயத்தை உருவாக்குவோம்.

அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!” இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.