“77% முதியவர்கள் முழுமையான கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொண்டுள்ளனர்”- சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்!

Photo: Health Minister Official Facebook Page

 

சிங்கப்பூரில் கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. கொரோனா மருத்துவ பரிசோதனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து பகுதிகளிலும் கொரோனா தடுப்பூசி நிலையங்கள் அமைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசிப் போடப்பட்டு வருகிறது.

முதியவர்களுக்கு கொரோனா தொற்று எளிதாகப் பரவக்கூடும் என மருத்துவ நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள் கூறி வரும் நிலையில், கொரோனா தடுப்பூசிப் போடுவதில் முதியவர்களுக்கு முன்னுரிமை அளித்துள்ளது சுகாதாரத்துறை. நடக்க முடியாத முதியவர்களுக்கு மருத்துவ குழுவினர், அவர்களின் வீடுகளுக்கு சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை சுகாதாரத்துறை அமைச்சகம் (Ministry of Health- ‘MOH’) செய்துள்ளது.

கடல் மற்றும் கடலோர பொறியியல் துறை- போட்டித்தன்மையை அதிகரிக்கும் திட்டம்!

இந்த நிலையில், சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று (28/07/2021) வெளியிட்டுள்ள அறிக்கையில், “60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்களில் சுமார் 77% பேர் முழுமையான கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொண்டுள்ளனர். அதாவது கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸையும் போட்டுக் கொண்டுள்ளனர். சுமார் 1,87,000 முதியவர்கள் கொரோனா தடுப்பூசியின் ஒரு டோஸ் கூடப் போட்டுக் கொள்ளவில்லை” எனத் தெரிவித்துள்ளது.

“60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்பதிவு தேவையில்லை; அவர்கள் நேரடியாகவே தடுப்பூசி நிலையங்களுக்கு சென்று கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம். பொதுச் சுகாதார ஆயத்த நிலை மருந்தகங்களுக்கோ (Public Health Preparedness Clinics – ‘PHPCs’), பலதுறை மருந்தகங்களுக்கோ சென்று தடுப்பூசியின் முதல் டோஸைப் போட்டுக் கொள்ளலாம். குடியிருப்பு வட்டாரங்களுக்குச் சென்று தடுப்பூசிப் போடும் வகையில் 10 மொபைல் மருத்துவக் குழுக்கள் பணியமர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு https://www.vaccine.gov.sg/locations/mvt என்ற இணையதளத்தை அணுகலாம். வெளியே செல்ல இயலாத முதியவர்கள் வீட்டிலிருந்தபடி தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள 1800-650-6060 என்ற தொலைபேசி எண்ணை (Silver Generation Office Hotline Number) அழைக்கலாம்” என்று சுகாதாரத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதி உட்பட புதிதாக 4 தொற்று குழுமங்கள்…

இதனிடையே, சுகாதாரத்துறை அமைச்சர் ஓங் யீ குங் (Health Minister Ong Ye Kung) தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “முதியவர்களில் சிலர் இன்னும் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளாதற்கான காரணம். தடுப்பூசிப் போட்டுக் கொண்டால் மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்பட்டிடுமோ என்பது பற்றிய கவலைகள் தான். மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்றவை இயற்கையாகவே நிகழ்கின்றன. இதற்கும் கொரோனா தடுப்பூசிக்கும் தொடர்பில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

முதியவர்களில் சிலர் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள தயக்கம் காட்டி வரும் நிலையில், சமூக வலைதளங்கள் மூலம் பிரதமர், துணை பிரதமர், அமைச்சர்கள், சமூக ஆர்வலர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கொரோனா தடுப்பூசிப் போட்டுக் கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.