“டெல்டா உருமாறிய கிருமி அப்படி இல்லை”- தடுப்பூசிப் போட்டுக்கொள்ள முதியவர்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுறுத்தல்!

Photo: Ministry Of Health/Facebook Page

 

சிங்கப்பூரில் அரசு மேற்கொண்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, கொரோனா பரவல் குறைந்துள்ளது. கொரோனா பரவல் குறைந்ததன் காரணமாக, கட்டுப்பாடுகளைப் படிப்படியாக விலக்கிக்கொண்டு வருகிறது சிங்கப்பூர் அரசு. இருப்பினும், பொதுமக்கள் அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. மேலும், கடற்கரைகள், பூங்காக்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில் சுகாதாரத்துறை சார்பில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

 

கொரோனா தடுப்பூசியை பொதுமக்கள் ஆர்வமுடன் செலுத்திக் கொண்டு வருகின்றன. இதனால் கொரோனா தடுப்பூசிக்கான முன்பதிவும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சிங்கப்பூர் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் தடுப்பூசி நிலையங்கள் அமைக்கப்பட்டு, கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

 

இருப்பினும், ஒரு சிலர் தடுப்பூசியை போட்டுக்கொள்ள தயக்கம் காட்டி வரும் நிலையில், ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் கொரோனா தடுப்பூசியை அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

 

இந்த நிலையில் முதியவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள ஊக்கப்படுத்தவும், அறிவுறுத்தவும் வேண்டும் என்று அனைத்து பொது பயிற்சியாளர் கிளினிக்குகள் (All General Practitioner Clinics- ‘GP’)மற்றும் முதன்மை பராமரிப்பு வழங்குநர்களுக்கு (Primary Care Providers) கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் ஓங் யி காங் (Health Minister Ong Ye Kung) மற்றும் சிங்கப்பூரின் மருத்துவச் சேவைகள் இயக்குநர் கென்னத் மாக் (Singapore’s director of medical services Kenneth Mak) ஆகியோர் அறிவித்தனர்.

 

“எங்கள் ஜி.பி.க்கள் (GPs) மற்றும் முதன்மை பராமரிப்பு வழங்குநர்கள் (Primary Care Providers), எங்கள் தன்னார்வலர்கள், சுகாதார வல்லுநர்களின் உதவியை நாங்கள் கேட்கிறோம். பல வெள்ளி தலைமுறை தன்னார்வலர்களும் சமூகத்தில் உள்ள மூத்தவர்களை அணுகுவர். 70 வயதுக்கு மேற்பட்டோரில் 29 சதவீதம் பேர் இன்னும் கொரோனா தடுப்பூசிப் போட்டுக்கொள்ளவில்லை.

 

நான் வெளியே செல்லாததால், நான் பாதுகாப்பாக இருக்கிறேன் என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் டெல்டா உருமாறிய கிருமி அப்படி இல்லை. நீங்கள் வீட்டில் தங்கியிருந்தாலும் டெல்டா உருமாறிய கிருமி உங்களைக் கண்டுபிடிக்கும். மேலும் இந்த நாட்களில் தொற்று பரவல் பெரும்பாலானவை வீட்டிலேயே நிகழ்கின்றன.

 

பல முதியவர்கள் தடுப்பூசி போட விரும்பவில்லை. ஏனெனில் அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் இருக்கலாம் மற்றும் தடுப்பூசிகளுடன் தொடர்புடைய பக்க விளைவுகளை விரும்பவில்லை. ஆனால் கொரோனா தடுப்பூசிகள் மட்டுமல்லாமல், எந்தவொரு தடுப்பூசியிலும், எப்போதுமே கொஞ்சம் ஆபத்து இருக்கும். மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் மட்டுமே முதியவர்கள் அதிக பாதகமான பக்க விளைவுகளை அனுபவிக்கின்றனர்” என சுகாதாரத்துறை அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.