பிளம்பிங் பழுதுப் பார்க்கும் பட்டறையில் திடீர் தீ விபத்து!

Photo: Singapore Civil Defence Force Official Facebook Page

சிங்கப்பூரில் எண் 86 கேலாங் பாருவில் (No.86 Geylang Bahru) உள்ள ஒருமாடி கட்டிடத்தில் தொழிற்துறை வளாகத்தில் பிளம்பிங் பழுதுப் பார்க்கும் பட்டறை (Plumbing Services Workshop) செயல்பட்டு வருகிறது. இந்த பட்டறையில் நேற்று (07/10/2021) அதிகாலை 02.35 AM மணிக்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படையினருக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. அதையடுத்து, 17 அவசர வாகனங்களுடன் சுமார் 60 சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படையின் (Singapore Civil Defence Force- ‘SCDF’) தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தைச் சுற்றி தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். அப்போது, ஆளில்லா தீயணைப்பு இயந்திரங்கள் (Unmanned Firefighting Machine- ‘UFM’) மூலம் தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, தீ கட்டுக்குள் வந்தது. இதையடுத்து, தீயணைப்பு வீரர்கள் சுவாச கருவி செட்டை (Breathing Apparatus Sets) அணிந்துக் கொண்டு, தீ விபத்து ஏற்பட்ட அறைக்கு நுழைந்தனர். பின்னர், இரண்டு மணி நேரம் போராடி தீயை முழுவதுமாக அணைத்தனர். இருப்பினும், அங்கிருந்தப் பொருட்கள் அனைத்தும் தீயில் கருகியதாகக் கூறப்படுகிறது.

தீயணைப்புப் பணிகளில் ஈடுபட்ட தீயணைப்பாளர் ஒருவர், புகையை உள்வாங்கியதால் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு (Singapore General Hospital) ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். பின்னர், அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

ஆஸ்திரேலியாவுக்கு செல்ல காத்திருக்கும் சிங்கப்பூர் மாணவர்கள்!

இருப்பினும், வீரருக்கு எந்த வித காயமும் ஏற்படவில்லை. அதேபோல், வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படை தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

இந்த தீ விபத்து தொடர்பாக, வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணையானது நடைபெற்று வருகிறது.