இலவச ஆக்சிமீட்டர் கருவியைப் பெற்றுக்கொள்வதற்கான துண்டுப் பிரசுரங்களைப் பெறவில்லையா?

Photo: Temasek Foundation

 

சிங்கப்பூரில் அரசு மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்த நிலையில் அரசின் ஒத்துழைப்புடன் டெமாசெக் அறக்கட்டளை (Temasek Foundation) சிங்கப்பூரில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தலா ஒரு பல்ஸ் ஆக்சிமீட்டர் (Oximeter) கருவியை இலவசமாக வழங்கி வருகிறது. கடந்த ஜூன் 28- ஆம் தேதி முதல் ஜூலை 3- ஆம் தேதி வரை ஒவ்வொரு வீட்டின் லெட்டர்பாக்ஸிலும் (Letter Box) துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. இதனை கொண்டு ஆக்சிமீட்டரை குடியிருப்பாளர்கள் பெற்று வருகின்றன. ஜூலை 5- ஆம் தேதி வரை 1,67,000 ஆக்சிமீட்டருக்கு மேல் குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், விநியோகிக்கப்பட்டத் துண்டு பிரசுரங்களை இலவச ஆக்சிமீட்டருக்கு என்று அறியாமல் சில குடியிருப்பாளர்கள், அதனை தூக்கி எறிந்துவிட்டனர். மேலும், ஆக்சிமீட்டர் பெறுவதற்காக நிலையத்திற்கு சென்ற அவர்களுக்கு ஆக்சிமீட்டர் வழங்கப்படவில்லை. துண்டுப் பிரசுரங்கள் கட்டாயம் தேவை என நிலையத்தின் ஊழியர்கள் தெரிவித்தனர்.

 

இது குறித்து விளக்கமளித்த டெமாசெக் அறக்கட்டளை, “துண்டுப் பிரசுரத்தைத் தொலைத்தவர்களுக்கு அது மீண்டும் தரப்பட மாட்டாது. ஏற்கனவே, தங்கள் வீட்டில் ஆக்சிமீட்டர் கருவியை வைத்திருக்கும் குடியிருப்பாளர்கள் தங்களின் துண்டுப் பிரசுரத்தை மற்றவர்களுக்கு கொடுக்கலாம். துண்டுப் பிரசுரங்களைப் பெறாத குடியிருப்பாளர்கள் 1800-738-2000 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம் (அல்லது) oximeter@temasekfoundation.org.sg க்கு மின்னஞ்சல் அனுப்பலாம். அதேபோல் துண்டுப் பிரசுரங்களைத் தொலைத்தவர்கள் Oximeter@temasekfoundation.org.sg என்ற மின்னஞ்சல் முகவரியில் தகவல் அனுப்ப வேண்டும். பின்னர், அதிகாரிகள் விசாரித்து உரிய குடியிருப்பாளர்களுக்கு ஆக்சிமீட்டர் கருவியை வழங்குவர்” எனத் தெரிவித்துள்ளது.

 

இன்றைய கொரோனா சூழலில் ஒவ்வொரு வீட்டிலும் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவைக் கண்டறிய உதவும் ஆக்சிமீட்டர் கருவி மற்றும் உடல் வெப்ப நிலையை அறிந்துக் கொள்ள உதவும் தெர்மா மீட்டர் கருவி ஆகிய இரண்டும் இருப்பது அவசியமாகும். இந்த கருவியைக் கொண்டு தினந்தோறும் தங்கள் உடல்நிலையைப் பொதுமக்கள் சுயமாக பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.