ரிவர் வேலி ஹை பள்ளியில் நடந்தது என்ன?- நாடாளுமன்றத்தில் விளக்கமளித்த கல்வி அமைச்சர்!

Photo: Singapore Parliament

ரிவர் வேலி ஹை பள்ளியில் (River Valley High School) மாணவர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் கல்வி அமைச்சர் சான் சுன் சிங் (Education Minister Chan Chun Sing) இன்று (27/07/2021) விளக்கமளித்தார்.

அதில், “கடந்த ஜூலை 19- ஆம் தேதி அன்று காலை 11.35 மணியளவில் ரிவர் வேலி ஹை பள்ளி வளாகத்தில் உள்ள கழிப்பறை வாசலில் 16 வயது மாணவர் ஒருவர் கோடரியுடன் நிற்பதை மாணவர்கள் கண்டனர். அப்போது, அவர் மாணவர்களிடம் காவல்துறை அதிகாரிகளை அழைக்கும்படி கூறியிருக்கிறார். இதனால் பதட்டமடைந்த அந்த மாணவர்கள், இந்த தகவலை வகுப்பறையில் உள்ள ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவம் நிகழ்ந்த கழிப்பறைக்கு சென்ற ஆசிரியர், கோடரியுடன் நின்றுக் கொண்டிருந்த மாணவரை, கோடரியை கீழே போடுமாறு கூறினார். இதையடுத்து, அந்த மாணவர் கோடரியை கீழே போட்டார்.

இதனிடையே, மற்ற ஆசிரியர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்த 10 நிமிடத்திற்குள் சம்பவம் நடந்த பள்ளிக்கு விரைந்த காவல்துறையினர், கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் 16 வயது மாணவரை சம்பவம் நிகழ்ந்த கழிப்பறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு 13 வயது மாணவர் காயங்களுடன் அசைவில்லாமல் கிடப்பதைக் கண்டனர். அதைத் தொடர்ந்து, அந்த மாணவரை பரிசோதித்த மருத்துவ குழுவினர் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறினர். இந்த கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், சந்தேகத்தின் பேரில் 16 வயது மாணவரை கைது செய்தனர்.

குடியிருப்பின் கீழே இறந்துகிடந்த பெண் (காணொளி) – விசாரணை தொடர்கிறது

பின்னர், நிலைமை கட்டுக்குள் வந்ததும் இந்த சம்பவம் தொடர்பாக பள்ளியின் முதல்வர் ஆசிரியர்களிடம் விவரித்து பேசினார். அதன் தொடர்ச்சியாக, மாணவர்களிடமும் பேசினார். பின்பு, சம்பவம் நடந்த அன்று பிற்பகல் 03.15 மணியளவில் மாணவர்கள் அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பள்ளியில் மாணவர் ஒருவர் உயிரிழந்ததால், மாணவர்கள் வீடுகளுக்கு திரும்ப அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பெற்றோரின் ஒப்புதலைப் பெற்று மாணவர்கள் சிலரிடம், சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் பேசினர். முதற்கட்ட விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட மாணவரும், உயிரிழந்த மாணவரும் ஒருவருக்கொருவர் அறிமுகம் இல்லாதவர்கள் என்பது தெரியவந்தது. 16 வயது மாணவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு மனநல மதிப்பீட்டிற்காக ரிமாண்டில் உள்ளார்.” இவ்வாறு அமைச்சர் கூறினார்.

பள்ளியில் மாணவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம், மாணவர்களின் பெற்றோரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.