‘ரிவர் வேலி ஹை’ பள்ளி மாணவர் கொலை வழக்கு- குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞருக்கு காவல் நீட்டிப்பு!

 

கடந்த ஜூலை 19- ஆம் தேதி அன்று காலை 11.35 மணியளவில் ‘ரிவர் வேலி ஹை’ (River Valley High School) பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறையில் 13 வயது மாணவர் ஒருவர் படுகாயங்களுடன் இறந்து கிடந்தார். இந்த சம்பவம் சிங்கப்பூர் மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் குறித்து கொலை வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அதே பள்ளியில் பயின்று வரும் 16 வயது இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர், அவரை காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, அந்த இளைஞர் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இதையடுத்து, நீதிபதி உத்தரவின் பேரில், காவல்துறையினர் அவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், வழக்கு தொடர்பான விசாரணை நேற்று (10/08/2021) நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது அந்த இளைஞர் காணொளி மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அதேபோல், அவருடைய பெற்றோர், வழக்கறிஞர் குழுவும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

பிரபல இரு விமான நிறுவனங்களுக்கு உயரிய ஐந்து நட்சத்திர பாதுகாப்புத் தர குறியீடு!

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “மனநலக் கழகத்தில் (Institute of Mental Health- ‘IMH’) மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள், தடவியல் சோதனைகளை முடிக்கக் கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது. எனவே, அந்த இளைஞரின் காவலை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும்” என்று வாதிட்டார்.

இதனையேற்ற நீதிபதி, “அந்த இளைஞரின் நீதிமன்றக் காவலை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் ஆகஸ்ட் 24- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். வழக்கு விசாரணையின் போது அந்த இளைஞரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் Maple Bear பாலர் பள்ளியில் தீடீர் தீ விபத்து.! (காணொளி)

கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரணதண்டனை விதிக்கப்படலாம். இருப்பினும், குற்றம் புரிந்தவர் 18 வயதுக்கும் குறைவானவராக இருந்தால், அவருக்கு மரண தண்டனைக்குப் பதிலாக ஆயுள் தண்டனை விதிக்கச் சட்டத்தில் இடம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.