‘வாகனத்தை ஓட்டுபவர்களின் கவனத்திற்கு’- அமலுக்கு வந்தது திருத்தப்பட்ட போக்குவரத்து சட்டம்!

Photo: Land Transport Authority Official Facebook Page

 

 

சிங்கப்பூரில் சாலைகளில் ஏற்படும் வாகன விபத்துகளைக் குறைக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் சாலைப் போக்குவரத்து சட்டத்தில் திருத்தம் செய்து தாக்கல் செய்யப்பட்டு, பின்னர் இந்த சட்டம் (Road Traffic Act) கடந்த மே மாதம் நிறைவேற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, இந்த சட்டம் இன்று (30/06/2021) முதல் அமலுக்கு வந்துள்ளது.

 

அதன்படி, சட்டவிரோத வாகன பந்தயங்களில் ஈடுபடுவோர், இந்த பந்தயங்களை ஊக்குவிப்போர், அதிவேகத்தில் செல்வோர், ஆபத்தான வகையில் வாகனத்தை ஓட்டுபவர்கள் ஆகியோருக்கான அபராதம் மற்றும் சிறைத்தண்டனை ஆகியவை அதிகரிக்கப்பட்டுள்ளது. முதல்முறையாக குற்றம் புரிவோருக்கு ஓராண்டு வரையிலான சிறைத் தண்டனையும், 5,000 சிங்கப்பூர் டாலர் வரையிலான அபராதமும் விதிக்கப்படலாம். சட்டம் அமலுக்கு முன்பு, அபராத தொகையான 1,000 சிங்கப்பூர் டாலர் முதல் 2,000 சிங்கப்பூர் டாலர் வரை விதிக்கப்பட்டது. அதேபோல், அதிகபட்சமாக சிறைத்தண்டனை ஆறு மாதங்களாக இருந்தது.

 

மீண்டும் குற்றம் புரிவோருக்கு இரண்டு ஆண்டு வரையிலான சிறைத்தண்டனையும், 10,000 சிங்கப்பூர் டாலர் வரையிலான அபராதமும் விதிக்கப்படலாம். சட்டம் அமலுக்கு முன்பு, அபாரதமானது 2,000 சிங்கப்பூர் டாலர் முதல் 3,000 சிங்கப்பூர் டாலர் வரை விதிக்கப்பட்டது. அதேபோல், அதிகபட்ச சிறைத்தண்டனை ஓராண்டாக இருந்தது.

 

தாங்கள் புரிந்த போக்குவரத்து குற்றங்களுக்காக மற்றவர்களைப் பொறுப்பேற்க வைப்போருக்கும், மற்றவர்கள் புரிந்தக் குற்றங்களுக்காக தாங்கள் பொறுப்பேற்போருக்கும் 10,000 சிங்கப்பூர் டாலர் வரை அபாரதமோ அல்லது ஓராண்டு சிறையோ அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

 

வாகனங்களில் வேக வரம்பை மீறுவோர் தொடர்பான வழக்குகளில், சம்பந்தப்பட்ட வாகனம் பறிமுதல் செய்யப்படுவது கட்டாயமல்ல. அந்த வாகனம் குற்றம் புரிந்தவருக்குச் சொந்தமானது இல்லையென்றாலோ, உரிமையாளரின் அனுமதியின்றி வாகனம் பயன்படுத்தப்பட்டிருந்தாலோ, அது பறிமுதல் செய்யப்படாது.

 

சாலை வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவோர், எந்த சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்தாலும், வாகனம் ஓட்டுவதில் இருந்து தடைச் செய்யப்படலாம். வேறொருவருக்காகப் போக்குவரத்துக் குற்றத்தை ஏற்றுக்கொள்பவர்களும் வாகன ஓட்டுவதில் இருந்து தடைச் செய்யப்படலாம்.

 

சாலை போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் ஓட்டுநரைத் தகுதி நீக்கம் செய்யலாமா, வேண்டாமா என்பதை நீதிமன்றங்கள் தீர்மானிக்கும். மேலும், ஓட்டுநரைத் தகுதி நீக்கம் செய்யும் காலம் எவ்வளவு என்பதையும் நீதிமன்றங்களே தெரிவிக்கும்.

 

ஒரு நிறுவனத்தின் வாகனத்தை ஓட்டும் போது ஓட்டுநர்கள் குற்றத்தில் ஈடுபட்டால், அந்த நிறுவனங்கள் தங்கள் ஓட்டுநரை விரைவாக போக்குவரத்து காவல்துறையிடம் அடையாளம் காட்ட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கடந்த ஆண்டு சட்ட விரோத கார் பந்தயங்களில் ஈடுப்பட்டதற்காக 26 பேர் பிடிபட்டனர். இதேபோன்ற குற்றத்திற்காக 2015- ஆம் ஆண்டு முதல் 2019- ஆம் ஆண்டு வரை குற்றம்சாட்டப்பட்டோரின் எண்ணிக்கை 17 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.