அமைச்சர் சண்முகத்தின் முகநூல் பதிவு – சிங்கப்பூருக்கு உதவிய மலேசிய காவல்துறை

சிங்கப்பூரின் வட்டார நாடுகளின் காவல்துறைகளுக்கு இடையே நல்லுறவு நிலவுவதாக சட்ட,உள்துறை அமைச்சர் சண்முகம் கூறினார்.உதவி தேவைப்படும் சூழலில் அவை சிறந்த முறையில் ஒத்துழைப்புக் கொடுப்பதாகவும் கூறினார்.
சமீபத்தில் சிங்கப்பூரில் 32 மில்லியன் மதிப்பிலான ஆடம்பரப் பொருள் விற்பனையில் மோசடி செய்ததாகக் கூறப்படும் தம்பதியினர் வழக்கு குறித்து அமைச்சர் முகநூலில் பதிவிட்டார்.

மோசடியில் ஈடுபட்ட சிங்கப்பூர் தம்பதியினர் சிங்கப்பூரிலிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகினர்.
சிங்கப்பூர் காவல் படையின் தீவிர தேடுதல் வேட்டையில் சிக்காத தம்பதிக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.இம்மாதம் 11-ஆம் தேதி மோசடி ஜோடி மலேசியாவில் கைது செய்யப்பட்டு சிங்கப்பூரிடம் ஒப்படைக்கப் பட்டனர்.

சிங்கப்பூர் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்கும் என்று கூறிய சண்முகம்,சிங்கப்பூர்க் காவல்படை,அதன் வட்டாரக் காவல்துறைகளுடன் சிறந்தவகையில் தொடர்பு கொண்டிருப்பதாகவும் அதன் மூலம் தீவிரமாகப் பணியாற்றுவதாகவும் தெரிவித்தார்.

மோசடி தம்பதியரை ஒருவாரம் தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.இம்மாதம் 19-ஆம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்.மோசடிக் குற்றத்திற்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.