சிங்கப்பூரின் ஏற்றுமதி தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் ஆசியான் நாடுகள் – நிதியமைச்சர் லாரன்ஸ் ஓங் தகவல்

Singapore Customs

சிங்கப்பூரிலிருந்து ASEAN நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கான ஒப்பந்தம் குறித்த தகவலை நிதி அமைச்சர் லாரன்ஸ் ஓங் வெளியிட்டார். ஹில்டன் சிங்கப்பூர் ஆர்ச்சர்டு ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய நிதி அமைச்சர் லாரன்ஸ் சுங்கத்துறை ஒப்பந்தத்தின் மூலம் வர்த்தக இடையூறுகளின் போதும் விரைவான சுங்கத்துறை அனுமதி, சரக்கு சோதனையில் முன்னுரிமை போன்ற நன்மைகளை நிறுவனங்கள் பெற முடியும் என்பதை சுட்டிக்காட்டினார்.

எதிர்வரும் 2025ம் ஆண்டில் ஆசியான் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் சுங்கத்துறை நடைமுறைகளை விரைவாக முடித்துக் கொள்ளலாம். ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் பாதுகாப்பு நடைமுறைகளை கடுமையாக பின்பற்றும் என்று சிங்கப்பூர் சுங்கத் துறையின் சான்றிதழை பெற்றிருக்க வேண்டும்.

இதன்மூலம் ஆவணப்படுத்துதல், சரக்கு சோதனை போன்றவற்றை குறைக்கலாம். சான்றிதழுக்கு தகுதி பெறும் நிறுவனங்கள் உலகளாவிய வர்த்தக கட்டமைப்பின் கீழ் தரவரிசை படுத்தப்படும்.

ஆசியான் நாடுகளின் சுங்கத்துறை தலைவர்கள் செவ்வாய்க்கிழமை அன்று (June 6) ஏற்றுமதி தொடர்பில் இணக்கம் தெரிவித்தனர். இந்த ஆண்டின் இறுதிக்குள் “MRA”எனப்படும் ஒப்பந்த ஏற்பாட்டில் ஆசியான் நாடுகள் அனைத்தும் கையெழுத்திடும்.

இத்தகைய ஏற்பாட்டின் மூலம் சுங்கத்துறை அனுமதியை பெறும் நடவடிக்கைகள் 30% விரைவுபடுத்தப்படும். இதனால் நிறுவனங்கள் பணத்தை மிச்சப்படுத்தலாம்.

இந்த ஆண்டின் இறுதியில் சுங்கத் துறையின் இந்த உடன்படிக்கைக்கு ஆசிய நாடுகளில் மூன்று நாடுகள் ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சிங்கப்பூர் சுங்கத்துறை தெரிவித்தது. மேலும் ஆசியான் நாடுகளுக்கு அப்பால் ஜப்பான், கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் இரு தரப்பு சுங்கத்துறை ஏற்பாடுகளை சிங்கப்பூர் செய்துகொண்டு உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.