சிங்கப்பூர் பயணியுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்காணிக்க சுகாதாரத்துறை உத்தரவு!

Singapore passengers-trichy-airport

உலகை அச்சுறுத்தி வரும் ‘ஓமிக்ரான்’ என்ற புதிய வகை கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில், இந்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய நான்கு சர்வதேச விமான நிலையங்களில் வெளிநாட்டு பயணிகளின் வருகை, அவர்களுக்கு மேற்கொள்ளப்படும் RTPCR அல்லது ART பரிசோதனை உள்ளிட்டவைகளைக் கண்காணிக்க தமிழ்நாடு அரசு சிறப்பு அதிகாரிகளை நியமித்து, கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது அதேபோல், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனையானது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

70 வருடங்களைக் கடந்த சிங்கப்பூர் தமிழர் சங்கம் குறித்த அறியப்படாத தகவல்கள்!

இந்த நிலையில், நேற்று (02/12/2021) இரவு சிங்கப்பூர் சாங்கி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சுமார் 140 பயணிகளுடன் புறப்பட்ட ஸ்கூட் விமானம், இரவு 10.30 மணிக்கு திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. இதையடுத்து, அந்த விமானத்தில் பயணித்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆண் நபர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, நோய்த்தொற்று பாதித்த நபர் உடனடியாக திருச்சி அரசு பொது மருத்துவமனையில், ஓமிக்ரான் சிறப்பு சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை தனிமைப்படுத்தியுள்ள மருத்துவர்கள், ஓமிக்ரான் வகை கொரோனாவா எனபதை கண்டறியஅவரின் ரத்த மாதிரியை சேகரித்து பெங்களூருவில் உள்ள ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். அத்துடன், இது குறித்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். பரிசோதனை முடிவுவானது இன்று இரவு அல்லது நாளை காலை வெளியாகும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

சிங்கப்பூர் அரசாங்கத்தின் விண்வெளி தொழில்நுட்பத்தில் கால் பதிக்கும் அமேசான்!

இந்நிலையில், சிங்கப்பூர் பயணியுடன் திருச்சி வந்த சக பயணிகள் 140 பேரின் முழுமையான முகவரியை சேகரித்துக் கொண்ட மாவட்ட சுகாதாரத்துறை, அவர்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும், எக்காரணத்தைக் கொண்டும் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டாம் என்றும், உடல்நலக்குறைவு ஏற்பட்டால் உடனடியாக, தகவல் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது. அதேபோல், இவர்களைத் தொடர்ந்து கண்காணிக்க சுகாதாரப் பணியாளர்களுக்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, இந்தியாவில் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பேருக்கு ‘ஓமிக்ரான்’ வகை கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.