துறைமுகத்தில் பணியாற்றும் கடலோடிகளுக்கும் கொரோனா தடுப்பூசி!

Photo: REUTERS

சிங்கப்பூரில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 80% மேற்பட்டவர்களுக்கு முழுமையாக கொரோனா தடுப்பூசிப் போடப்பட்டுள்ளது. அதேபோல், சிங்கப்பூரில் நிரந்தர குடியுரிமை பெற்றவர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு கொரோனா தடுப்பூசிப் போடப்பட்டு வருகிறது.

கடுமையாகும் எம்பிளாய்மண்ட் பாஸ், S-பாஸ் அடிப்படைத் தகுதி

அந்த வகையில், சிங்கப்பூரில் உள்ள துறைமுகத்தில் பணியாற்றி வரும் வெளிநாடுகளைச் சேர்ந்த கடலோடிகளுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் நேற்று (30/08/2021) முதல் நடைமுறைக்கு வந்தது. இதற்கான ‘SEAVAX’ என்ற திட்டத்தைப் போக்குவரத்துத் துறையின் மூத்த அமைச்சர் சீ ஹொங் டாட் (Chee Hong Tat) அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த ஆண்டின் ‘International Safety@Sea’ என்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட போது அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

“இந்த திட்டத்தின் மூலம் கொரோனா நோய்தொற்றுக்கு எதிரான மீள்திறன் பெற்ற நாடாக சிங்கப்பூரை உருமாற்றும் தேசிய முயற்சியில், அவர்களுக்குத் தடுப்பூசிகளைப் போட்டுப் பாதுகாப்பதும் அடங்கும்” என்று அமைச்சர் கூறினார்.

சிங்கப்பூரில் 120 பேருந்து ஓட்டுநர்களுக்கு கொரோனா பாதிப்பு.!

நேற்று (30/08/2021) முதல் இந்த கொரோனா தடுப்பூசித் திட்டத்தின் மூலம் சிங்கப்பூரில் வசிக்காத, தகுதியுள்ள வெளிநாட்டுக் கடலோடிகள் விரும்பினால் சிங்கப்பூரில் தடுப்பூசிப் போட்டுக் கொள்ளலாம். இதற்காக அவர்கள் பணிபுரியும் இடத்திற்கு அருகிலேயே தடுப்பூசி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், தடுப்பூசி போட்டுக்கொள்ள அவர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

30- க்கும் அதிகமான நாட்கள் துறைமுகத்தில் தங்கியிருந்து, அத்தியாவசிய சரக்கு அல்லது பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்டு இருக்கின்ற கடலோடிகளுக்கு இந்த திட்டம் பொருந்தும். இந்தத் திட்டத்தின் கீழ் ‘ஃபைசர்-பயோஎன்டெக்’ அல்லது மாடர்னா கொரோனா தடுப்பூசிகள் போடப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.