சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் போட்டியிடும் தர்மன் சண்முகரத்தினம் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்!

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் போட்டியிடும் தர்மன் சண்முகரத்தினம் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்!
Photo: Singapore Minister Tharman

 

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் போட்டியிட ஏதுவாக, தனது கட்சி பதவி, அமைச்சரவைப் பதவி, அரசு சார்ந்தப் பதவி என அனைத்துப் பதவிகளையும் ராஜினாமா செய்துள்ளார் சிங்கப்பூரின் மூத்த அமைச்சரும், தமிழருமான தர்மன் சண்முகரத்தினம். இது தொடர்பாக, சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்- க்கு மூன்று பக்கங்களைக் கொண்ட தனது ராஜினாமா கடிதத்தை இன்று (ஜூன் 08) அனுப்பியுள்ளார்.

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய ஜோடிகள் அதிர்ச்சி தோல்வி!

மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்தினத்தின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்வதாகக் கூறி, பிரதமர் லீ சியன் லூங் அவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம் குறித்து விரிவாகப் பார்ப்போம்!

சிங்கப்பூரில் கடந்த 1957- ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25- ஆம் தேதி பிறந்தவர் தர்மன் சண்முகரத்தினம். இவரது தந்தை இந்திய வம்சாவளியும், தமிழரும் ஆவார். தனது பள்ளிப் படிப்பை சிங்கப்பூரில் தொடர்ந்த தர்மன் சண்முகரத்தினம், இங்கிலாந்தின் புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றான லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ் (London School of Economics) மற்றும் யூனிவர்சிட்டி ஆஃப் கேம்பிரிட்ஜ் (University of Cambridge), அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்டு கென்னடி ஸ்கூலில் (Harvard Kennedy School) தனது கல்லூரி படிப்பையும், உயர்கல்விப் படிப்பையும் முடித்துள்ளார்.

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் களமிறங்குகிறார் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம்!

கடந்த 2001- ஆம் ஆண்டு மக்கள் செயல் கட்சியில் இணைத்துக் கொண்ட தர்மன் சண்முகரத்தினம், அதே ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், அக்கட்சியின் சார்பில் ஜூரோங் குழுமத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதன்முறையாக நாடாளுமன்றத்திற்கு சென்றார்.

கடந்த 2003 முதல் 2008 வரை சிங்கப்பூரின் கல்வி அமைச்சராகவும், 2007 முதல் 2015 வரை நிதியமைச்சராகவும், 2011 முதல் 2012 வரை மனிதவள அமைச்சராகவும், 2011 முதல் 2019 வரை சிங்கப்பூரின் துணைப் பிரதமராகவும் பதவி வகித்துள்ளார்.

66 வயதான தர்மன் சண்முகரத்தினம், கடந்த 2019- ஆம் ஆண்டு மே மாதம் முதல் மூத்த அமைச்சராகப் பணியாற்றி வந்துள்ளார். அரசியலிலும், அரசுப் பணிகளிலும் நன்கு அனுபவம் வாய்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.