சவுதி இளவரசரைச் சந்தித்த சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்!

Photo: Prime Minister of Singapore Official Facebook Page

தாய்லாந்து நாட்டின் பாங்காக்கில் தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா (Prime Minister of Thailand Prayut Chan-o-cha) தலைமையில் நவம்பர் 17- ஆம் தேதி அன்று தொடங்கிய 29-வது ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (Asia-Pacific Economic Cooperation- ‘APEC’) பொருளாதார தலைவர்கள் கூட்டத்தில் (Economic Leaders’ Meeting- ‘AELM’) சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் கலந்துக் கொண்டு நேற்று (18/11/2022) உரையாற்றினார். இந்த கூட்டத்தில் ‘APEC’- ல் இடம் பெற்றுள்ள நாடுகளின் தலைவர்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.

இந்தியர்களுக்கு சலுகை அளித்து சவுதி அரேபிய தூதரகம் அறிவிப்பு!

அதைத் தொடர்ந்து, நேற்று (18/11/2022) சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை (HRH Crown Prince Mohammed Bin Salman of Saudi Arabia) சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் நேரில் சந்தித்துப் பேசினார்.

இது குறித்து சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “APEC கூட்டத்திற்கு இடையே சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்தேன். இரு நாடுகள் இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து நாங்கள் நல்ல விவாதம் செய்தோம். சிங்கப்பூர் அடுத்த வாரம் இரண்டாவது சவுதி-சிங்கப்பூர் கூட்டுக் குழுக் கூட்டத்தை நடத்தவுள்ளது.

இந்த ஆண்டு ஹஜ் பயணத்திற்காக சிங்கப்பூர் யாத்ரீகர்களுக்கு அளிக்கப்பட்ட ஆதரவிற்காக, இளவரசருக்கு நன்றி தெரிவித்ததோடு, ஹஜ் பயணத்திற்கான ஒதுக்கீட்டை மேலும் அதிகரிக்குமாறு வலியறுத்தினேன். பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சிங்கப்பூருக்கு வருமாறு சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப்பின் அழைப்பு விடுத்ததைக் கூறினேன்” என்பது குறிப்பிடத்தக்கது.

“இந்தியாவின் மேலும் ஒரு நகரத்தில் இருந்து அமெரிக்காவுக்கு நேரடி விமான சேவை”- ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு!

இதைத் தொடர்ந்து, ‘APEC’ கூட்டத்தின் முக்கிய நிர்வாகிகள், ஹாங்காங், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களையும் சிங்கப்பூர் பிரதமர் தனித்தனியே சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். ஏற்கனவே, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சிங்கப்பூர் பிரதமர் சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘APEC’ கூட்டத்தில் தாய்லாந்து நாட்டின் பாரம்பரியத்தை பறைச்சாற்றும் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இதனை தலைவர்கள் கண்டுகளித்தனர்.