இந்திய அரசால் தடைச் செய்யப்பட்ட அமைப்புக்கு சிங்கப்பூரில் இருந்து நிதியுதவி: காரைக்குடியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை!

Video Crop Image

 

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை அடுத்த வைத்தியலிங்கப்புரத்தைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது (வயது 43). இவர் சிங்கப்பூரில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணிப்புரிந்து வந்த நிலையில், இந்திய அரசால் தடைச் செய்யப்பட்ட அமைப்புக்கு நிதியுதவி அளித்ததாக அவர் மீது புகார் எழுந்தது. இது குறித்து தீவிரமாக விசாரணை நடத்திய சிங்கப்பூர் காவல்துறையினர், சாகுல் ஹமீதின் பணி அனுமதியை ரத்து செய்து, இந்தியாவுக்கு திருப்பி அனுப்பினர்.

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டனில் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி!

மேலும், சிங்கப்பூர் காவல்துறையினர், இந்திய தூதரகம் மூலம் இந்திய அரசுக்கும் இது குறித்து தெரிவித்திருந்தனர். இதையடுத்து, சென்னை சர்வதேச விமான நிலையம் வந்திறங்கிய சாகுல் ஹமீதை, மடக்கிப் பிடித்த இந்திய அரசின் புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி, பின்னர் விடுவித்தனர்.

இந்த நிலையில், ஜூன் 07- ஆம் தேதி அன்று காலை 07.30 மணிக்கு இந்திய அரசின் அமலாக்கத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள், வைத்தியலிங்கப்புரத்தில் உள்ள சாகுல் ஹமீதின் வீடு மற்றும் அவரது மாமனார் முகமது அலி ஜின்னா (வயது 75) ஆகியோரின் வீடுகளில் அதிரடியாக சோதனையிட்டனர். அத்துடன், அவர்களது குடும்பத்தினரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

சுமார் ஏழு மணி நேரம் நீடித்த இந்த சோதனையில், அவர்களது மொபைல்கள் மற்றும் ஆவணங்களைக் கைப்பற்றிய அதிகாரிகள், சாகுல் ஹமீதை மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இதனிடையே, முகமது அலி ஜின்னாவை ஜூன் 08- ஆம் தேதி அன்று காலை மதுரையில் உள்ள அலுவலகத்தில் ஆஜராகுமாறு அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.

பைக்கில் சூப்பர்மேன் சாகசம்… நொடியில் பிரிந்த உயிர் – மலேசிய ஆடவரின் பரிதாப செயல்

சாகுல் ஹமீது, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே இந்தியா திரும்பியிருந்த நிலையில், இந்திய அரசின் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.