சிங்கப்பூரர்களுக்கு அச்சமில்லை – Covid தொற்றுக்கு மத்தியில் சர்வதேசப் பயணத்தை மேற்கொள்ளும் சிங்கப்பூரர்கள்

PHOTO: CHANGI AIRPORT GROUP

உலகம் முழுவதும் கோவிட்-19 தொற்று வழக்குகள் அதிகரித்து வந்தாலும் சிங்கப்பூரர்களின் சர்வதேசப் பயணம் தொடர்கிறது என்று கூறப்படுகிறது.உலகின் சர்வதேச நாடுகளில் கோவிட்-19 சுகாதாரக் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன.

ஐரோப்பிய நாடுகள்,இங்கிலாந்து,ஆஸ்திரேலியா உட்பட பல இடங்களில் தீவிரமாகப் பரவக்கூடிய BA.4,BA.5 போன்ற ஒமிக்ரோன் மாறுபாடுகளால் தொற்று வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.

பன்னாட்டு விமான நிலையங்களில் கடந்த சில மாதங்களாக நெரிசலை சமாளிக்க முடியாத அளவுக்கு பயணங்கள் அதிகரித்துள்ளன.மேலும் பயணிகள் கோராத பயணப் பெட்டிகள் தேங்கிக் கிடக்கின்றன.

சில விமான நிலையங்களில் பயணப் பெட்டிகளுக்காக அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருப்பதால் பயணிகள் ஆத்திரமடைந்துள்ளனர்.ஆனால் சிங்கப்பூரர்களை இத்தகைய இடையூறுகள் தடுத்து நிறுத்தவில்லை என்று பயணத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லண்டனின் ஹீத்ரோ விமான நிலையம் ,ஜூன் 20-ஆம் தேதிக்கான விமானப் பயணங்களில் பத்து சதவீதப் பயணத்தை ரத்து செய்யுமாறு,விமான நிறுவனங்களை வலியுறுத்தியுள்ளது.இதனால் 90 விமானங்களில் பயணம் செய்யும் சுமார் 15000 பயணிகள் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.அதேவேளையில் சிங்கப்பூரர்கள் இந்த ஆண்டு இறுதி வரை விடுமுறைக்கு முன்பதிவு செய்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது.

செப்டம்பர் மாத விடுமுறையில் சிங்கப்பூர் குடும்பங்கள் பயணிக்க விரும்பும் நாடுகளில் ஆஸ்திரேலியா,தாய்லாந்து,பாலி ஆகியவை பிரபலமாகவிளங்குகின்றன என்று தகவல்கள் கூறுகின்றன.இருப்பினும் சில சிங்கப்பூரர்கள் சர்வதேச பயணங்களை மேற்கொள்வதில் இன்னும் எச்சரிக்கையாகவே இருக்கின்றனர்.