சிங்பாஸ் மோசடியில் ஈடுபட்டவரின் நிலை! – 8 செல்போன்கள்,மடிக்கணினி பறிமுதல்

singpass digital sign
Photo Credit : GovTech
சிங்பாஸ் மோசடியில் ஈடுப்பட்ட இருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
மோசடியில் தொடர்புடையதாகக் கூறப்படும் 25 வயதான மலேசியர் லீ ஜின் ஆன் மீது நேற்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.லீயும் 33 வயது ஆடவரும் குற்றவியல் விவகாரத்துறை அதிகாரிகளால் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளிலும் அதிகாரிகள் நடத்திய சோதனையில் இருவரும் பிடிபட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

குற்றப்பத்திரிக்கையில் ஒருவருக்கு வழங்கப்பட்ட மின்னிலக்க அட்டையைப் பயன்படுத்தி வங்கியை ஏமாற்ற அலைஷியஸ் என்பவருடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகாரிகளின் விசாரணைக்கு உதவுவதற்காக லீ நான்கு நாட்கள் விசாரணைக் காவலில் வைக்கப்படுவார்.நாளை மறுதினம் அவர் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப் படுவார்.சிங்பாஸ் தொடர்பான மோசடிகள் குறித்து நேற்று முன்தினம் வரை புகார்கள் வந்ததாக காவல்துறை தெரிவித்தது.
$21,000-க்கும் அதிகமான தொகையை மோசடிகளில் பாதிக்கப்பட்டவர்கள் இழந்துள்ளனர்.பாதிக்கப்பட்டவர்களில் சிலரது கடன்பற்று அட்டைகளில் இருந்து அவர்களுக்குத் தெரியாமல் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன.
எட்டு கைப்பேசிகள்,ஒரு மடிக்கணினி,16 சிம் அட்டைகள்,$1,20,000 ரொக்கத் தொகை மற்றும் பல்வேறு வங்கி அட்டைகள் போன்றவை கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.