சிங்கப்பூர் நிரந்தர குடியுரிமைப் பெற்றவருக்கு 7,000 சிங்கப்பூர் டாலர் அபராதம்!

File Photo : Immigration and Checkpoints Authority

 

சிங்கப்பூரின் நிரந்தர குடியுரிமைப் பெற்றவர் கோ கியூங் ஹோ (Ko Kyung Ho). இவருக்கு வயது 46. இவர் கடந்த ஆண்டு தென்கொரியாவுக்கு சென்றார். பின்னர், அவர் அங்கிருந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சிங்கப்பூர் திரும்பினார். அப்போது சாங்கி சர்வதேச விமான நிலையத்தில் குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையத்தின் (Immigration and Checkpoints Authority- ‘ICA’)அதிகாரிகளிடம் வீட்டில் தனியாக அல்லது தன்னுடன் பயணம் செய்த குடும்ப உறுப்பினர்களுடன் அரசின் கட்டாய தனிமை (Stay Home Notice- ‘SHN’) உத்தரவை நிறைவேற்றுவதாகக் கூறியிருந்தார்.

 

அதேபோல், சிங்கப்பூர் வருவதற்கு முன்பாக, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் எனது தனிமை காலத்தைப் பிரத்யேக இடங்களில் நிறைவேற்றுவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி விண்ணப்பித்திருந்தார்.

 

இந்த நிலையில், கோ கியூங் ஹோவின் கட்டாய தனிமை காலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 25- ஆம் தேதி முதல் டிசம்பர் 9- ஆம் தேதி வரை 14 நாட்கள் ஆகும்.

 

அவர் அரசின் கட்டாய தனிமைக் காலத்தை முறையாகப் பின்பற்றுகிறாரா என்பது குறித்து ஆய்வு செய்ய, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26- ஆம் தேதி அன்று அமலாக்க அதிகாரிகள் (Enforcement officers) அவர் அளித்த வீட்டு முகவரி, ரிவர் வேலி சாலைக்கு அருகே ஷாங்காய் சாலையில் சாரல்ஸ்டன் கூட்டுரிமை (Charleston condominium in Shanghai) குடியிருப்பில் உள்ள வீட்டிற்கு சென்றனர். அந்த வீட்டில் அவருடன் மனைவியும், இரு குழந்தைகளும் தங்கியிருந்தனர். ஆனால் கோ கியூங் ஹோ மட்டுமே தென்கொரியாவுக்கு பயணம் மேற்கொண்டு திரும்பியதையும், அவரது மனைவியும், இரு குழந்தைகளும் செல்லவில்லை என்பது அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதையடுத்து, தொற்று நோய் சட்டத்தின் கீழ் (Infectious Diseases Act) அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

 

இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று (29/06/2021) இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கோ கியூங் ஹோ தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். அதைத் தொடர்ந்து அவருக்கு 7,000 சிங்கப்பூர் டாலரை அபராதமாக விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.