“அந்த மனசு தான் சார் கடவுள்” சிறந்த விருதை தட்டிச்சென்ற சக்திபாலன்; சிங்கப்பூர் அதிபர் பாராட்டு.!

Pic: Halimah Yacub/FB

சிங்கப்பூரின் பிரபல செய்தி நிறுவனமான ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் 2021ஆம் ஆண்டுக்கான சிறந்த சிங்கப்பூரர் விருதை 28 வயதான சக்திபாலன் பாலதண்டாயதம் என்ற இளைஞருக்கு வழங்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் கடந்த 2020ம் ஆண்டு ஜூலை மாதம் ரேயா என்ற ஒரு வயது குழந்தைக்கு கல்லீரலைத் தானம் செய்ய யாராவது முன்வர இயலுமா என அக்குழந்தையின் பெற்றோர் சமூக ஊடகம் ஒன்றில் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

பின்னர், அதை பார்த்த சக்திபாலன் அன்றைய தினம் பின்னிரவு 1 மணியளவில் குழந்தையின் பெற்றோரைத் தொடர்புகொண்டு, தம்முடைய கல்லீரலின் ஒரு பகுதியை அக்குழந்தைக்கு தானமாக வழங்க முடிவுசெய்தார். இதையடுத்து, பல்வேறு கட்ட மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு, தம்முடைய கல்லீரலின் 2 விழுக்காட்டை முன் பின் அறியாத அந்த குழந்தைக்கு 2020 செப்டம்பர் 30ம் தேதி தானமாக வழங்கினார்.

டாக்ஸியிலேயே பிறந்த குழந்தை… தனது 24 வருட அனுபவத்தில் இதுவே முதன்முறை என நெகிழ்ந்த ஓட்டுநர்!

இந்த தன்னலமற்ற செயலுக்காகவும், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்ததற்காகவும் சக்திபாலன் இந்த விருதுக்குத் தேர்ந்து எடுக்கப்பட்டார். தமது கல்லீரலின் ஒரு பகுதியைத் தானமாக வழங்கி ஒரு வயதுக் குழந்தைக்கு மறுவாழ்வு அளித்த சக்திபாலனின் செயலை பாராட்டி சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப் அந்த விருதை வழங்கிக் கௌரவித்தார். சிங்கப்பூரர்கள் சேவையாற்ற கூடியவர்கள் என்பதை உணர்த்தி இருப்பதாகவும், மனிதாபிமானத்துக்கு ஈடு இணை ஏதுமில்லை என்பதை நிரூபித்துள்ளதாகவும் அதிபர் ஹலிமா யாக்கோப் குறிப்பிட்டார்.

இந்த விருதுப்பெற்ற சக்திபாலன் கூறுகையில், ஈரல் இன்றி சிரமப்பட்டு, போராடி அதில் வெற்றிகண்ட குழந்தை ரேயாவுக்கு இந்த விருதை நான் சமர்ப்பிக்கிறேன் என்றும், ஆண்டின் சிறந்த சிங்கப்பூரர் விருது தமக்குக் கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை என்றும் இது எனக்கு ஓர் இன்ப அதிர்ச்சி என்றும் கூறினார்.

மேலும், இந்த விருதும் எனது கதையும் இன்னும் பலரை சமூக சேவையில் ஈடுபட ஊக்குவிக்கும் என நம்புகிறேன் என்றும், தயக்கமிருந்தாலும் மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று, உறுப்புதானம் அல்லது இரத்த தானத்தில் பலரும் ஈடுபடவேண்டும் என தனது விருப்பத்தை தெரிவித்தார்.

இனி எந்த கட்டுப்பாடுகளும் இல்லை…எல்லைகளைத் திறக்க தயாராகும் மலேசியா – சிங்கப்பூரில் எப்போது?