தமிழில் உரையைத் தொடங்கிய துணைப் பிரதமர் ! – தமிழ் பேரவையின் கொண்டாட்டத்தில் பங்கேற்றுப் பேசிய திரு.வோங்

lawrence wong
சிங்கப்பூரில் வசிக்கும் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து எந்த கடுமையான சவால்களையும் எதிர்கொண்டு வெற்றிபெற முடியும் என்பதை கருத்தில்கொண்டே ‘முன்னேறும் சிங்கப்பூர்’ பெருந்திட்டத்தை தொடங்கியுள்ளதாக துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
மக்களிடையே வலுவான பிணைப்பை ஏற்படுத்துவதே அத்திட்டத்தின் நோக்கம் என்று கூறினார்.

ஆகஸ்ட் 27 அன்று நடைபெற்ற தமிழர் பேரவையின் தேசிய தின விருந்துக் கொண்டாட்டத்தில் பங்கேற்ற துணைப் பிரதமர் ‘வணக்கம்,தேசிய தின வாழ்த்துக்கள்’ என்று தமிழில் உரையைத் தொடங்கினார்.
முன்னேறும் சிங்கப்பூர் திட்டத்தில் தமிழ்ச் சமூகத்தினர் ஈடுபாடு கொண்டு ஒருங்கிணைந்து எப்படி முன்னேற முடியும் என்பது பற்றிய கருத்துகளைப் பகிர்ந்து கொள்வார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

சிங்கப்பூரில் வசிக்கும் ஒருவரின் பின்னணி,மொழி,இனம்,மதம் எதுவாக இருப்பினும் அவருக்கு ஏராளமான வாய்ப்புகளைக் கொண்ட சிங்கப்பூரை உருவாக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
தமிழர் பேரவை சிங்கப்பூரில் ஆற்றிவரும் சேவையை துணைப் பிரதமர் பாராட்டினார்.தமிழர் பேரவையின் வரலாறு சிங்கப்பூரின் வரலாற்றைப் பிரதிபலிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.